கச்சேரி கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகளிற்கு பிசிஆர் பரிசோதனை: இயன்றவரை தனித்திருக்க அறிவுறுத்தல்!

யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று நடந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட அதிகாரிகளிற்கு பிசிஆர் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார நடைமுறைகளை பேணாத விதமாக யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று நடந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட அதிகாரிகளே இந்த அறிவுறுத்தலிற்கு உள்ளாகியுள்ளனர்.

யாழ் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான சுகாதார வைத்திய அதிகாரிகள், தமது பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த- சுகாதார நடைமுறை பேணப்படாத யாழ் மாவட்ட செயலக கூட்டத்தில் கலந்து கொண்ட- அதிகாரிகளிற்கு இந்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதை தமிழ் பக்கம் நம்பகரமாக அறிந்தது.

கலந்துரையாடலிற்கு சென்ற அதிகாரிகள், தொற்று மற்றவர்களிற்கு ஏற்படாத விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மற்றவர்களுடனான சந்திப்புக்களை குறைத்து, இயன்றவரை தனிமைப்பட்டு, 7வது நாள் பிசிஆர் பரிசோதனைக்கு தயாராகுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கோப்பாய் பிரதேச செயலாளரையும், தவிசாளரையும் அந்த பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி தனிமைப்படுத்தியுள்ளார் என இன்று வெளியான செய்தி தவறானது.

முன்னுதாரண அதிகாரியாக செயற்பட்ட கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி, காதார விதிமுறை பேணப்படாத நேற்றைய கலந்துரையாடலில் கலந்து கொண்ட கோப்பாய் பிரதேச செயலாளர், தவிசாளருக்கு ஏனைய அதிகாரிகள் வழங்கியதை போன்ற அறிவித்தலையே விடுத்தார்.

அத்துடன், கூட்டத்திற்கு சென்ற அதிகாரிகள் வீடுகளிலும் தொற்று ஏற்படாத வண்ணம் எச்சரிக்கையாக இருக்குமாறும், குறிப்பாக முதியவர்கள் வீட்டிலிருந்தால் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் பிரதிநிதிகள் முன்னுதாரணமாக பிசிஆர் சோதனைக்குட்படுத்திக் கொள்வது, சமூகத்தில் பாதுகாப்புணர்வை அதிகரிக்கும் என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here