கைத்தொலைபேசி களவாடி விற்பனை செய்த யுவதி உள்ளிட்ட 8 பேர் கைது: 20 கைத்தொலைபேசிகள் மீட்பு!

கைத்தொலைபேசிகளை களவாடி விற்பனை செய்து வந்த யுவதி ஒருவர் உட்பட 8 சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை (6) காலை அம்பாறை சம்மாந்துறை நகரக்கடை ஒன்றில் தொடர்ச்சியாக 20க்கும் அதிகமான விலையுயர்ந்த கைத்தொலைபேசிகள் களவாடப்பட்டுள்ளதாக உரிமையாளரினால் இன்று(6) சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம் முறைப்பாட்டிற்கு அமைய அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்கவின் கட்டளையின் படி அம்பாறை கல்முனை பிராந்திய பதில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எம்.ஜயரட்னவின் ஆலோசனையினூடாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச்.ஜயலத்தின் வழிகாட்டலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா, உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன் தலைமையில் சென்ற சார்ஜன்ட் ஆரியசேன (24893) கான்டபிள்களான துரைசிங்கம்(40316), ஜகத்(74612) குழுவினர் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

குறித்த நடவடிக்கையின் போது சம்மாந்துறை நகரப்பகுதியில் கைத்தொலைபேசி விற்பனை செய்யும் கடை ஒன்றில் பணியாற்றிய இருவர் அங்கு காட்சிப்படுத்தப்பட்ட விலையுயர்ந்த கைத்தொலைபேசிகளை தொடர்ச்சியாக களவாடி விற்பனை செய்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து கடை உரிமையாயார் இவ்விடயம் தொடர்பில் அறிந்து பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

இதற்கமைய கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமரா காணொளியினை அடிப்படையாக கொண்டு விசாரணை மேற்கொண்ட பொலிஸார் முதலில் குறித்த கடையில் பணியாற்றிய சந்தேக நபர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன் போது சாய்ந்தமருது மற்றும் காரைதீவு பகுதியில் தொலைபேசிகளை வாங்கி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் கைதாகினர். இவ்வாறு கைதானவர்களை கொண்டு முன்னெடுக்கபட்ட மேலதிக விசாரணையின் போது பெண் ஒருவர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைதாகினர்.

இதன்போது களவாடப்பட்ட 20 கைத்தொலைபேசிகளில் காரைதீவு பகுதியில் இருந்து 8 கைத்தொலைபேசிகளும், சாய்ந்தமருதில் இருந்து 10 கைத்தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளது.

அதே வேளை குறித்த சம்பவத்தில் கைத்தொலைபேசிகளை களவாடியவர்கள் அதை வாங்கியவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யுவதி உட்பட 8 சந்தேக நபர்களும் நாளை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

-பா.டிலான்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here