ஊருக்குத்தான் உபதேசம்: வவுனியாவில் அமைச்சரின் நிகழ்விற்கு கூட்டம் சேர்க்கப்படுகிறது!

அமைச்சர் ஒருவரின் வருகைக்காக வவுனியாவில் 200 பேர் வரையில் பங்குபெறவிருக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மரண சடங்குகள், கோவில் விழாக்கள் மற்றும் திருமண நிகழ்வுகள் போன்ற முக்கிய நிகழ்வுகளிற் கூட அதிகபட்சம் 50 பேர் வரை தான் பங்குபற்ற முடியும் என்கிற ஓர் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருப்பதோடு, இவற்றை மீறுபவர்க்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாளை (7) சனிக்கிழமையன்று சுமார் 200 பேருக்கு மேலாக பங்குபெறவிருக்கும் நிகழ்வொன்றினை வவுனியா மாவட்டச் செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

மேற்படி இந்நிகழ்வானது அமைச்சர் ஒருவரின் வருகைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதோடு, இந்நிகழ்வில் பங்குபற்றவிருப்பவர்களுக்கான உணவு ஏற்பாடுகள் மற்றும் நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் விருந்தினர்களுக்கு அணிவிப்பதற்கான மாலை கட்டும் ஏற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முடக்கப்படிருக்கின்ற தென்னிலங்கையிலிருந்து வரும் அமைச்சரின் நிகழ்வில் சுமார் 200 பேர் வரையில் பங்குபெற வைத்து, மாலை அணிவிப்பு, உணவு பரிமாறல்கள் போன்றவைகளை நடத்தும் போது, சுகாதார அபாயம் ஏற்படுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்டம் அனைவருக்கும் சமம் என்றாலும், அதிகாரத்தில் உள்ளவர்கள் அவற்றை மீறி செயற்படுவது வழக்கமாகி விட்டது.

யாழ்ப்பாணத்திற்கு இன்றும் (6), நாளை மறுநாளும் (8) நடக்கும் நிகழ்வுகளில் 23 அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்காக அமைச்சர்களின் பரிவாரங்கள் நகரிலுள்ள பல ஹொட்டல்களில் நேற்று முதல் வந்து தங்கியிருக்க ஆரம்பித்துள்ளனர்.

சுகாதார விடயங்களில் சாதாரண மக்களை என்ன அளவுகோலுடன் அதிகாரிகள் அணுகுகிறார்களோ, அதே அளவுகோலுடன்தான் அரசியல்வாதிகளையும் அதிகாரிகள் அணுகுகிறார்களா என்ற பலமான கேள்வி எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here