யாழ் நகரில் பொலிசார் விழிப்புணர்வு நடவடிக்கை!

வடமாகாணத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த முடியாது என வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன தெரிவித்தார்.

இன்றைய தினம் யாழ்ப்பாண நகரில் பொலீசாரினால் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு செயற்பாட்டில் ஈடுபட்டனர். குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டில் ஈடுபட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது இலங்கையில் கொரோனா தொற்று அதிகளவில் பரவிவருகின்றது. வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை நான் வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவியேற்ற பின் கொரோனா ஒழிப்பு தொடர்பில் போலீசாரால் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு அங்கமாக இன்றையதினம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் மக்கள் முக கவசம் அணிதல் தொடர்பான ஒரு விழிப்புணர்வு செயற்பாட்டினை மேற்கொண்டு வருகின்றோம்.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரைக்கும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். அதாவது சுகாதார திணைக்களத்தினரின் சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.

அதாவது சமூக இடைவெளியானது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தற்போதைய சூழ்நிலையில் பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களில் கட்டாயமாக சமூக இடைவெளி பேணுதல் வேண்டும்.

அத்தோடு மக்கள் பெரும்பாலும் வீடுகளில் இருந்து தங்களுடைய கடமைகளைச் செய்வது மிகச் சாலச் சிறந்தது. எனினும் வடக்கு மாகாணத்தில் குறித்த தொற்றினை கட்டுப்படுத்த வேண்டுமாக இருந்தால் பொதுமக்களின் ஒத்துழைப்புடனே அது சாத்தியமாகும் என தெரிவித்தார்.

அத்துடன் வீட்டை விட்டு வெளியில் வரும் போது கட்டாயமாக முக கவசம் அணிந்து வெளியில் வரவேண்டும் எனவும் வடக்கு மக்கள் தற்கால சூழ்நிலையில் தங்களையும் தங்களுடைய சமூகத்தினையும் பாதுகாக்க வேண்டியது அனைவரதும் பொறுப்பு எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here