பேரழிவிலும் ஒரு மகிழ்ச்சி: 91 மணித்தியாலத்தின் பின் இடிபாடுகளிற்குள்ளிருந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுமி (VIDEO)

மேற்கு துருக்கியில் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்ட 91 மணி நேரத்திற்குப் பிறகு, மூன்று வயது சிறுமியொருவர் கட்டிட இடிபாடுகளிற்குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ளார். இதேவேளை, பூகம்பத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் ஏஜியன் கடலில் ஏற்பட்ட 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 111 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1035 பேர் காயமடைந்தனர். மேற்கு துருக்கியின் இஸ்மீரில் பெரும் அனர்த்தம் ஏற்பட்டிருந்தது.

“91 வது மணி நேரத்தில் ஒரு அதிசயத்தை நாங்கள் கண்டிருக்கிறோம். நாங்கள் அனுபவித்த பெரும் வேதனையுடன், இந்த மகிழ்ச்சியும் எங்களுக்கு உண்டு.” என்று இஸ்மீர் மேயர் டங்க் சோயர் ட்வீட் செய்துள்ளார்.

உயிர் தப்பிய சிறுமி அய்டா கெஸ்ஜின் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அய்டா கெஸ்ஜின் இடிபாடுகளில் சிக்கியிருப்பதை முதன்முதலில் கண்ட நிவாரணப் பணியாளர் நுஸ்ரெட் அக்சோய், முதலில் ஒரு குழந்தை அலறல் கேட்டதாகக் கூறினார்.

பின்னர் அவர் மற்ற நிவாரணப் பணியாளர்களால் மீட்கப்பட்டார் என்றும், அவர் ஒரு சலவை இயந்திரத்தால் மூடப்பட்டதால் பலத்த காயமடையவில்லை என்றும் அவர் கூறினார்.

கட்டிட இடிபாடுகளிற்குள்ளிருந்து 3, 14 வயது சிறுமிகள் மீட்கப்பட்டதற்கு ஒரு நாள் கழித்து இந்த சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.

இஸ்மிர் மாகாணத்தில் மீட்புப் பணியாளர்கள் ஐந்து கட்டிடங்களில் தொடர்ந்தும் தேடுதல் நடத்தி வருகிறார்கள்.

மிக மோசமாக பாதிக்கப்பட்ட துருக்கிய நகரம் இஸ்மிரில் உள்ள பேராக்லி ஆகும். அங்கு திங்களன்று கொண்டாட்டமும் சோகமும் கலந்திருந்தன. எலிஃப் பெரின்செக் என்ற மூன்று வயது சிறுமியும், 14 வயது இடில் சிரின் என்ற சிறுமியும் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டனர். ஆனால் இருவரும் தலா ஒரு உடன்பிறப்பை இழந்தனர்.

அண்டை நாடான கிரேக்கத்தில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.

பூகம்பத்தைத் தொடர்ந்து 1,464 க்கும் மேற்பட்ட பின் நிலநடுக்கங்கள் துருக்கியில் உணரப்பட்டது. அதில், 44 அதிர்வுகள் ரிக்டர் அளவுகோலில் நான்கு அளவுகளுக்கு மேல் இருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here