ஆதனவரியை குறைத்தால் பாதீட்டு ஆதரவளிப்போம்: கரைச்சி பிரதேச சபையின் எதிர்தரப்பு உறுப்பினர்கள் கூட்டாக அறிவிப்பு!

கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபையால் அதிகரித்த வீதத்தில் அறவிடப்பட்டு
வருகின்ற ஆதனவரியை மக்களின் நலன் கருத்தி குறைக்க வேண்டும் எனவும்
அவ்வாறு குறைக்கும் உத்தரவாதத்தை 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு சபையில்
சமர்பிக்கப்படுவதற்கு முன் வழங்கினால் நாம் பாதீட்டு ஆதரவாக
வாக்களிப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்பதனை தெரிவிப்பதாக எதிர்தரப்பு
உறுப்பினர்கள் 13பேர் கையொப்பம் இட்டு கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

கரைச்சி பிரதேச சபையால் அறவிடப்பட்டு வருகின்ற ஆதனவரி வீதம் கிளிநொச்சி
மாவட்டத்தை பொறுத்தவரை அதிகரித்த வீதமாகும். இது கரைச்சி பிரதேச சபையின்
எல்;லைக்குட்பட்ட மக்கள் மீது சுமத்தப்பட்ட வரிச் சுமையாகும். எனவேதான்
இந்த வரி அறவிடுவதற்கு ஆரம்பித்த நாள் முதல் சபையில் எதிர்தரப்பு
உறுப்பினர்களான நாமும், சபைக்கு வெளியில் பொது மக்களும்,பொது
அமைப்புகளும் தங்களுடைய எதிர்ப்பினை தொடர்ந்தும் வெளியிட்டு
வந்துள்ளனர். இருப்பினும் மக்களின் நலன் கருதி ஆதனவரி குறைப்பு பற்றி
கரைச்சி பிரதேச சபையின் ஆளும் தரப்பு எவ்விதமான ஆக்கபூர்வமான
நடவடிக்கையினையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

எனவே வருகின்ற 2021 ஆம் ஆண்டுக்கான சபையின் வரவு செலவு திட்டத்தின் ஊடாக ஆதனவரியை 3 தொடக்கம் 5 வீதத்திற்குள் குறைக்கும் உத்தரவாதத்தை கரைச்சி பிரதேச சபை எமக்கு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கும் போது நாம் அனைவரும் 2021 இற்கான கரைச்சி பிரதேச சபையின் வரவுசெலவு திட்டத்தை ஆதரிப்பது தொடர்பில் சாதகமாக பரிசீலிப்போம். மாறாக ஆதனவரியை குறைப்பதற்கு சபை உத்தரவாதம் தர மறுக்கும் பட்சத்தில் மக்களின் நலன் கருதி வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும் என்பதனையும் நாம் தெரிவித்துக் கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ளனர்.

சமத்துவ கட்சியின் சுயேச்சை குழு, தமிழர் விடுதலைக் கூட்டணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களே கூட்டாக ஒப்பம் இட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்.

அத்தோடு தவிர்க்க முடியாத காரணத்தால் கடிதத்தில் ஒப்பம் இடாத மேலும் சில
எதிர்தரப்பு உறுப்பினர்களும் ஆதனவரி குறைக்கப்படல் வேண்டும் எனவும்,
அதற்காக தாங்களும் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here