உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் தனிமைப்படுத்திக் கொண்டார்

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்துள்ளார். அவரோடு நெருங்கிய தொடர்புள்ள ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

உலக நாடுகளை கொரோனா வைரஸ் ஆட்டிப் படைத்து வருகிறது. உலக நாடுகளுக்குக் கொரோனா தடுப்பு தொடர்பான வழிமுறைகளை அறிவித்து வரும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியாஸிஸையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஒருவருக்குக் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் நேற்று உறுதியானது.

இதையடுத்து, டெட்ராஸ் அதானம் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார். ஆனால், கொரோனா தொடர்பான எந்தவிதமான அறிகுறியும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியாசிஸ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஒருவருக்குப் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. ஆதலால், நானும் தனிமைப்படுத்திக் கொண்டேன். நான் நலமாக இருக்கிறேன்.

கொரோனா தொடர்பான அறிகுறிகள் எனக்கு இல்லை. சில நாட்கள் மட்டும் உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளைப் பின்பற்றி தனிமைப்படுத்திக் கொள்ள இருக்கிறேன். வீட்டிலிருந்தே பணிபுரிய இருக்கிறேன்.

உலக சுகாதார அமைப்பின் சுகாதார வழிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றுவது அவசியம். அவ்வாறு பின்பற்றும்போதுதான், கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க முடியும், வைரஸை அடக்க முடியும். சுகதார முறைகளையும் பாதுகாக்கலாம்.

நானும், உலக சுகாதார அமைப்பின் ஊழியர்களும் கொரோனாவில் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்கவும், உலக மக்களைக் காக்கவும் தொடர்ந்து ஈடுபடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here