முஸ்லீம் காங்கிரஸின் அனைத்து விடயங்களையும் அறிந்த சுமந்திரன் கொக்கரிப்பதில் அர்த்தமில்லை

முஸ்லீம் காங்கிரஸின் அனைத்து விடயங்களையும் அறிந்த சுமந்திரன் கொக்கரிப்பதில் அர்த்தமில்லை என உல‌மா க‌ட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

கல்முனையில் அமைந்துள்ள உலமா கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்,

தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் சிறுபான்மை சமூகம் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. சிறுபான்மையினருக்கு எம்மை பொறுத்தவரை தனிக்கட்சி ஒன்று தேவை என்ற விடயத்தில் உறுதியாக உள்ளோம். பேரினவாத கட்சிகளுக்கு அடிமைகளாக இருக்க கூடாது என்ற நிலைப்பாட்டிலே நாம் உள்ளோம். சில நேரம் சமூக நலனை அடிப்படையாக கொண்டு சிறுபான்மை கட்சிகளாகிய நாம் இணைந்து செயற்பட்டுள்ளோம். தற்போது 20 அரசியல் சீர்திருத்தத்திற்கு முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கி விட்டார்கள் என்பதற்காக சிறுபான்மை விடயத்தில் முஸ்லீம்கள் தலையிட முடியாது என சிலர் கூறி வருகின்றார்கள்.

ஆனால் மலையக கட்சிகளும் கூட இவ்வாறான சில விடயங்களில் பேரினவாத கட்சிகளுடன் இணைந்தே செயற்படுகின்றனர்.எனவே தான் சிறுபான்மையினராக தற்போது தமிழர்கள் மாத்திரம் தான் உள்ளனர் என கூறுவது அரசியல் விளக்கமில்லாதவர்கள் கூறுவது போன்றதாகும். தமிழ் முஸ்லீம் அரசியலில் கல்முனை என்பது முக்கிய இடத்தினை பெறுகின்றது. கடந்த காலங்களில் கல்முனை விடயத்தை வைத்து முஸ்லீம் காங்கிரஸும் தமிழ் கட்சிகளும் அரசியல் செய்கின்ற விடயத்தை கடந்த காலங்களில் சுட்டிக்காட்டி இருந்தோம்.

கல்முனை பிரச்சினை ஏற்படுவதற்கு காரணம் உப செயலகம் இருப்பதனால் ஆகும்.எனவே தமிழ் உப பிரதேச செயலகத்தை நீக்கி பொது பிரதேச செயலகத்தின் ஊடாக தமிழ் முஸ்லீம்கள் பயணிக்க வேண்டும். எனவே அரசியல் வாதிகள் கல்முனையை இனிவரும் காலங்களில் விளையாட்டாக எடுத்துக்கொள்ள கூடாது. இதனை வைத்து எவரும் அரசியல் செய்யத்தேவையில்லை. கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லீம் கட்சிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இணைந்து ஆட்சிக்கு முட்டு கொடுத்திருந்தனர். அவ்வாறாயின் ஏன் கல்முனை பிரச்சினையை இதுவரை தீர்க்க முடியவில்லை. உங்கள் அரசியல் நடவடிக்கைக்காக மக்களிடம் விளையாடுகிறீர்களா என கேட்க விரும்புகின்றேன். இப்போது கலையரசன் எம்.பி கூட கல்முனையை காப்பாற்றுவதாக கூறுவதானது மக்களை அவரும் கட்சியும் ஏமாற்ற முயற்சிப்பதாகும்.

இதே போன்று ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸுடன் தமிழ் தேசிய கூட்டமைப்போ அல்லது சுமந்திரனோ ஏதாவது உடன்படிக்கை செய்து அரசியலை முன்னெடுத்துள்ளனரா இல்லை.இவ்வாறு எந்தவொரு உடன்படிக்கையும் செய்யாத நிலையில் சுமந்திரன் முஸ்லீம் காங்கிரஸை எவ்வாறு இணைந்து செயற்படுமாறு கூறுவது என கேட்கவிரும்புகின்றேன். இந்த நாட்டில் சிங்கள கட்சிகள் மற்றும் தமிழ் கட்சிகளிடையே பல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் தமிழ் முஸ்லீம் மக்களின் பிரச்சினையை தீர்க்க தமிழ் தேசிய கூட்டமைப்பும் முஸ்லீம் கட்சிகளும் ஏன் உடன்படிக்கை எதையும் செய்வதில்லை. ஒப்பந்தங்கள் எதுவும் இல்லாமல் பயணித்து விட்டு சுமந்திரன் அவர்கள் தற்போது முஸ்லீம் காங்கிரஸினை விமர்சிப்பது ஏன்? முஸ்லீம் காங்கிரஸின் அனைத்து விடயங்களையும் அறிந்த சுமந்திரன் கொக்கரிப்பதில் அர்த்தமில்லை என கூறினார்.

-பா.டிலான்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here