துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம்: பின்னதிர்வில் 196 முறை குலுங்கிய கட்டிடங்கள்!

துருக்கியில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆகப் பதிவானது.

ஏஜியன் கடலை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 16.5 கிலோ மீட்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியின் இஸ்மிர் நகரில் நிலநடுக்கம் காரணமாகப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

துருக்கி மட்டுமல்லாது கீரிஸிலும் நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாகாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கு 20க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து முற்றிலும் சேதடைந்தன.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். 800 பேர் காயமடைந்துள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தால் இஸ்மிர் நகரமே உருக்குலைந்து போயுள்ளது. ஆங்காங்கே கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன.

நிலநடுக்கம் மட்டுமல்லாது துருக்கியின் கடற்கரையை ஓட்டிய பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், துருக்கியில் நிலநடுக்கத்திற்கு பின் 196 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. இவற்றில் 4க்கு கூடுதலாக ரிக்டர் அளவு கொண்ட நில அதிர்வுகள் 23 முறை ஏற்பட்டு உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதிலும் கட்டிடங்கள் பல குலுங்கியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தனைப் பின்னதிர்வுகள் ஏற்பட்டுள்ளன என்பதால் மூல நிலநடுக்கத்தின் தீவிரத்தன்மை அங்குள்ள புவியியல் நிபுணர்களையே ஆட்டம் காணச்செய்துள்ளது.

துருக்கியில் 1999 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு 17,000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here