சமூக இடைவெளி பேணல் சமூகத்தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு நடவடிக்கை

சமூக இடைவெளி பேணல் என்பது சமூகத்தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு நடவடிக்கை என யாழ் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

கொரோனா கால சமூக இடைவெளி பேணல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சமூக இடைவெளி பேணல் என்பது சமூகத்தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு நடவடிக்கை. இதனை ஐந்து நிலைகளில் நோக்க வேண்டும்.

1. தனிமனித சமூக இடைவெளி.
2. குடும்பநிலை சமூக இடைவெளி.
3. நிறுவனநிலை சமூக இடைவெளி.
4. கிராமநிலை சமூக இடைவெளி.
5. பிரதேசநிலை சமூக இடைவெளி.

தனிமனித சமூக இடைவெளி என்பது பொதுவிடத்தில் இருவருக்கு இடையே இருக்க வேண்டிய மிகக்குறைந்த தூரம். இதனால் கொரோனாத் தொற்று ஏற்படும் நிகழ்தகவு குறைக்கப்படும். இருவருக்கிடையிலான தூரம், அவர்கள் தொடர்பு கொள்ளும் கால அளவு அதிகமாயின் தூரமும் அதிகமாக அமைய வேண்டும். சமூக இடைவெளியின் பரிணாமம் தூரத்தின் கணியத்திலும், காலத்தின் கணியத்திலும் தங்கி உள்ளது.

குடும்ப சமூக இடைவெளியைப் பேணல் என்பது ஒரு குடும்பத்தவர் கொரோனாக் காலத்தில் பிறிதொரு குடும்பத்துடன் தொடர்புகொள்ளும் தடவைகளைக் குறைப்பதாக அமையும். அத்தியாவசியமற்ற தரிசிப்புக்களை உறவினர், நண்பர்கள் வீடுகளுக்கு கொரோனாக் காலத்தில் மேற்கொள்ளக் கூடாது.

நிறுவன சமூக இடைவெளியைப் பேணல் என்பது கொரோனாக் காலத்தில் ஒரு நிறுவனமானது தனது செயல்பாட்டை இயக்கிக்கொண்டு இருக்கும்போது வேறு நிறுவனங்கள், பொதுஅமைப்புக்களுடன் உள்ள நேரடி தொடர்புகளை அத்தியாவசிய தேவையின் நிமித்தம் அன்றி மேற்கொள்ளக் கூடாது. இதனால் குறித்த நிறுவனத்தில் இருந்து கொரோனாத் தொற்று வேறு இடங்களுக்குப் பரப்பப்படவோ அன்றேல் வேறு இடங்களில் இருந்து குறித்த நிறுவனத்திற்கு கொரோனாத் தொற்று பரவலோ நிகழலாம்.

அடுத்து கிராம சமூக இடைவெளியைப் பேணல் என்பது குறித்த கிராமம், வேறு பிரதேச மக்களால் தனிமைப்படுத்தப்பட்டு இயற்கையாக இருந்தால் அக்கிராமத்திற்கு கொரோனாத் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியம் குறைவு. தற்போதைய சூழலில் கிராமிய சமூக இடைவெளி கட்டாயம் பேணப்படல் வேண்டும்.

இறுதியாகப் பிரதேசநிலை சமூக இடைவெளியைப் பேணல் பூகோள பிரதேசரீதியில் தனிமைப்பட்ட பிரதேசங்களில் மக்கள் நடமாட்டத்தை மட்டுப்படுத்துவதாலோ, தேவையற்ற விதத்தில் பயணங்கள் மேற்கொள்வதனைக் கட்டுப்படுத்துவதாலோ குறித்த பிரதேசங்கள் கொரோனாத் தொற்றில் இருந்து பாதுகாக்கப்படும்.

மேற்கூறிய ஐந்து நிலைகளில் சமூக இடைவெளி பேணப்படின், கொரோனாப் பரம்பல் வீதம் வெகுவாகக் குறைக்கப்படும். இவற்றுடன் தனிநபர் சுகாதாரப் பழக்கங்களான முகக்கவசம் அணிதல், கைகழுவுதல், உடற் தொடுகைகளைத் தவிர்த்தல் என்பனவும் முக்கியமானவையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here