கூட்டமைப்பு உறுப்பினரை மோட்டார் சைக்கிளில் ஏற்றியதற்கே எகிறிய செயலாளர்; சமலை சந்திக்கலாமா?

தமிழ் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் அமைச்சர் சமல் ராஜபக்சவை சந்தித்து பேசியிருந்தனர். இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

முல்லைத்தீவில் 8 கிராமங்களை மகாவலி அதிகாரசபையிடம் ஒப்படைக்கும்படி கரைத்துறைபற்று  பிரதேச செயலகத்திற்கு விடுக்கப்பட்ட உத்தரவு, மட்டக்களப்பு மேய்ச்சல்தரையில் வெளிமாவட்ட சிங்கள விவசாயிகளிற்கு பகிர்ந்தளித்தது பற்றி இதில் கந்ரையாடப்பட்டிருந்தது.

இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொண்டதை ஆச்சரியத்திற்குரிய ஒன்றாகவே பார்க்கிறார்கள். ஏனெனில் ஒருவித தற்கொலை அரசியலை முன்னர்த்தி வந்த முன்னணி, எந்த நெகிழ்விற்கும் தயாராக இருக்கவில்லை.

உண்மையில் முன்னணி இதுவரை கையாண்டு வந்த கொள்கையின்படி பார்த்தால், சமல் ராஜபக்சவின் சந்திப்பில் கலந்து கொண்ட கஜேந்திரகுமாரையும், கஜேந்திரனையும் முன்னணி அலுவலகத்தில் கட்டி வைத்து விட்டு, தம்பிகள் கல்லெறிந்து மரணதண்டனை வழங்கியிருக்க வேண்டும்.

ஆனால் அது நடக்கவில்லை.

ஏனெனில், இந்தவகை தற்கொலை அரசியலை முன்னணிக்குள் பிரதானமாக வளர்த்தவர்- கட்சியின் செயலாளர் கஜேந்திரன்தான்.

அதை நாம் சொல்லவில்லை. கட்சி உறுப்பினர்களே சொல்கிறார்கள். அன்றைய சந்திப்பு தொடர்பில் இருவரையும் விமர்த்து முன்னணி உறுப்பினர்கள் பலர் அரசல் புரசலாக பல தகவல்களை எழுதி வருகிறார்கள்.

அப்படி எழுதப்பட்ட ஒரு சுவாரஸ்ய தகவல் இது.

யாழ் மாநகரசபை உறுப்பினர் ஒருவரின் தந்தையின் மரண வீடு. எல்லா கட்சிகளின் மாநகரசபை உறுப்பினர்களும் அதில் கலந்து கொண்டனர். அப்படி கூட்டமைப்பு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

உடலை தகனம் செய்யுமிடத்திற்கு உறுப்பினர்களும் சென்றனர். மீண்டும் மரண வீட்டுக்கு திரும்பியபோது, கூட்டமைப்பு மாநகரசபை உறுப்பினருக்கு வாகனம் இருக்கவில்லை. எப்படியோ போய் விட்டார். திரும்பி வர திண்டாடினார்.

இதை பார்த்த முன்னணி மாநகரசபை உறுப்பினர் ஒருவர் அவருக்கு உதவினார். அவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்து மரண வீட்டில் விட்டுள்ளார்.

இதை ஒரு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக யாரோ ஒரு விசுவாசி, கட்சி செயலாளர் செ.கஜேந்திரனிடம் போய் சொல்லியுள்ளார்கள்.

பிறகென்ன, விசாரணை ஆரம்பம்.

குறிப்பிட்ட உறுப்பினரை அழைத்த கஜேந்திரன், அவரை கடுமையாக பேசியுள்ளார். ஒரு கூட்டமைப்பு உறுப்பினரை எப்படி மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்தாய் என்பதுதான் கேள்வி.

இந்த வகையான கேள்விகளிற்கு எப்படி பதில் சொல்வதென்பது யாருக்கும் தெரிந்திருக்காது. ஆனால், அந்த கேள்வியை கஜேந்திரன் கேட்டார். அவருக்கு எப்படி பதில் சொல்வதென்றும் தெரிந்திருக்கும்.

இப்பொழுது சமல் ராஜபக்சவை சந்திக்க கட்சி தலைவர் கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும் சென்றிருக்கிறார்கள்.

வாகனம் இல்லாமல் சுடலையில் தவித்த சக தமிழ் தேசிய உறுப்பினர் ஒருவரை சிறுதுதூரம் ஏற்றி வந்தால் அது துரோகமெனில், சமல் ராஜபக்சவை சென்று சந்தித்ததும்- முன்னணியின் அளவுகோளின்படி துரோகம் அல்லவா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here