ஷார்ஜாவில் மையம் கொண்ட ‘யுனிவர்ஸ் பாஸ்’; பஞ்சாப் அற்புதம்!

கிறிஸ் கெயின் காட்டடி ஆட்டம், மன்தீப் சிங்கின் நிதானமான அரை சதம் ஆகியவற்றால் ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 46வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

முதலில் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்ககப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது. 150 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி 7 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 150 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதுவரை 12 போட்டிகளில் 6 வெற்றி, 6 தோல்வி என 12 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட்டில் சிறப்பான நிலையை பெற்றதால் 4வது இடத்துக்கு உயர்ந்தது. தோல்விகளால் துவண்டுகிடந்த பஞ்சாப் அணி தொடர்ச்சியாகப் பெறும் 5வது வெற்றியாகும்.

முதல் பாதி லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை எதிர்கொண்ட போது 7 போட்டிகளில் 6 தோல்வியைச் சந்தித்தது பஞ்சாப் அணி. ஆனால் 2வது சுற்று ஆட்டத்தில் இதே கொல்கத்தா அணியை வீழ்த்தி தொடர்ந்து 5வது வெற்றியை பஞ்சாப் அணி பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 12 போட்டிகளில் 6 வெற்றி, 6 தோல்வி என 12 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு நிகர ரன்ரேட் அடிப்படையில் சரிந்துள்ளது.

கெயில் வருகை

உண்மையில், விளையாடும் 11 பேர் கொண்ட அணிக்குள் கிறிஸ் கெயில் வந்தபின்தான் பஞ்சாப் அணிக்கு புதுரத்தம் பாய்ச்சியதுபோல் இருக்கிறது. கிறிஸ் கெயில் பெயரைக் கேட்டாலே “சும்மா அதிருதுல்ல” என்பதைப் போல் கெயில் ஆட்டமிழக்கவில்லை, களத்தில் இருக்கிறார் என்றாலே எதிரணி வீரர்களுக்கு ஒருவிதான அழுத்தம், நெருக்கடி ஏற்பட்டு விடுகிறது. அதுதான் நேற்றும் ஏற்பட்டது.

ராகுல் ஆட்டமிழந்தபின் களத்துக்கு வந்த கெயில், கொல்கத்தா வீரர்களின் பந்துவீச்சை நொறுக்கி அள்ளிவிட்டார். சிறிய ஷார்ஜா மைதானத்தில் பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிகளுக்கும் பறந்தன.

நிதானமான ரன் ரேட்டில் சென்றிருந்த பஞ்சாப் அணி கெயில் புயல் மையம் கொண்டபின் ரொக்கெட் வேகத்தில் ரன் ரேட் உயர்ந்தது. அதிரடியாக ஆடிய கெயில் 51 ரன்களில் (29 பந்துகள், 5 சிக்ஸ், 2 பவுண்டரி) ஆட்டமிழந்தார். ஆட்டநாயகன் விருது யாருக்கு கிடைக்கும்…..கெயிலுக்குத்தான் வழங்கப்பட்டது.

கிறிஸ் கெயலுக்கு உறுதுணையாக ஆடிய தொடக்க ஆட்டக்காரர் மன்தீப் சிங் 61 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இருவரும் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 60 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அரைசதம் அடித்த மன்தீப் சிங் கடந்த 2 நாட்களுக்கு முன் காலமாகிய தனது தந்தைக்கு வானத்தை நோக்கி பார்த்து அஞ்சலி செலுத்தினார்.

போராட்டக் குணம்

பஞ்சாப் அணி வீரர்களைப் பொறுத்தவரை ஐபிஎல் தொடரின் தொடக்கத்திலிருந்தே ஒவ்வொரு போட்டியிலும் நிலைத்தன்மையை, போராட்டக் குணத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். கடைசிப் பந்து வரை வெற்றிக்காக போராட வேண்டும் என்பதை அவர்கள் நேற்றைய போட்டிவரை மாற்றிக்கொள்ளவில்லை. அதனால்தான் தொடர்ந்து 5வது வெற்றியை பஞ்சாப் அணியால் பெற முடிகிறது.

ஐபிஎல் டி20 தொடரில் முதல் பாதியில் அதாவது 7 ஆட்டங்களில் 6 தோல்வி அடைந்த ஓர் அணி, 2வது பாதியில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவது அரிதினும் அரிதானது. அதை பஞ்சாப் அணி நிகழ்த்தி வருகிறது.

பஞ்சாப் அணி உண்மையில் ப்ளே ஓஃப் சுற்றை உறுதி செய்திருக்க வேண்டும். தனது முதல் ஆட்டத்தில் டெல்லி அணியுடனான ஆட்டத்தில், நடுவரின் தவறான தீர்ப்பால் வெற்றியை இழந்தது. அந்த வெற்றி கிடைத்திருந்தால், இந்நேரம் ப்ளே ஓஃப் சுற்றை அந்த அணி உறுதி செய்திருக்கும்.

பஞ்சாப் அணிக்கு வெற்றி பெறக்கூடிய அனைத்து திறமைகளும் இருந்தன. ஆனால், அதற்கான வழிமுறைகள் தெரியாமல்தான் முதல்பாதியில் திணறியது. இப்படிப்போய் விளையாடுகிறாங்களே……..என்று ஆதங்கப்பட்ட ரசிகர்கள், சமீபத்திய வெற்றியைப் பார்த்து இப்படித்தான் விளையாடணும் என்று பஞ்சாப் அணி்க்கு ரசிகர்களாகவே மாறிவிட்டனர்.

2வது பாதியில் அந்த வழிமுறைகளையும், திட்டமிடலையும் சரியாகப் பயன்படுத்தியதால்தான் தொடர்ந்து வெற்றிகளைப்ப பெற்று வருகிறது.

இதற்கு முன் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கூட 126 ரன்கள் சேர்த்து அந்த ரன்களுக்குள் சன்ரைசர்ஸ் அணியைச் சுருட்டி பஞ்சாப் அணி தனது போராட்டக் குணத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணியில் இருக்கும் பல வீரர்கள் வெளி உலகிற்கு அடையாளம் தெரியாத புது முக இளம் வீரர்கள். முருகன் அஸ்வின், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், மன்தீப் சிங் போன்ற வீரர்களை வைத்துக் கொண்டு திறமையாகச் செயல்படும் ராகுல் தலைமைக்கு பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும்.

குறிப்பாக இந்தப் போட்டியில் ஷமியின் பந்துவீச்சையும், லெக்ஸ்பின்னர்கள் ரவி பிஸ்னோய், முருகன் அஸ்வின் ஆகியோரைப் பாராட்டியே ஆக வேண்டும். தொடக்கத்தில் பிஸ்னோய், அஸ்வின் இருவரும் ரன்களை விட்டுக்கொடுத்தாலும், இருவரும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி 57 ரன்கள் ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதேபோல முகமது ஷமி தனது முதல் ஓவரிலேயே திரிபாதி, தினேஷ் கார்த்திக் விக்கெட்டை வீழ்த்தி கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சி அளித்தார். மக்ஸ்வெல் முதல் ஓவரிலேயே ராணாவின் விக்கெட்டைச் சாய்க்க அந்த சிரிவிலிருந்து கொல்கத்தா மீள அதிகநேரம் தேவைப்பட்டது.

ஷார்ஜா போன்ற சிறிய மைதானத்தில் பந்துகளை ஓங்கி அடித்தாலே சிக்ஸரில் தான் விழும். துடுப்பாட்ட சொர்க்கபுரியான இந்த ஆடுகளத்தில் கொல்கத்தா அணியை 149 ரன்களில் பஞ்சாப் அணி சுருட்டியதே பாராட்ட வேண்டிய அம்சம். பஞ்சாப் அணியின் விடா முயற்சிக்கு தொடர்ந்து வெற்றி கிடைத்து வருகிறது, அடுத்த இருபோட்டிகளையும் பஞ்சாப் அணி வென்றால், ப்ளே ஓஃப் சுற்றை உறுதி செய்ய வாய்ப்புள்ளது.

நிலையற்ற தன்மை

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை துடுப்பாட்டம், பந்துவீச்சில் நிலைத்தன்மையின்றி செயல்பட்டு வருகின்றனர். ஒருபோட்டியில் தோல்வி, ஒரு போட்டியில் மிகப்பெரிய வெற்றி என்று நிலையற்ற நிலையில்தான் செல்கிறார்கள்.

நம்பிக்கைக்குரிய வீரர்கள் முக்கியமான போட்டியில் சொதப்புவதும், பிஞ்ச் ஹிட்டர் அடித்து தூள் கிளப்பதும் சில நேரங்களில் நடக்கிறது. நிலையற்ற தன்மையால் கிடைக்கும் வெற்றி கொல்கத்தா அணியின் ப்ளே ஓஃப் சுற்றுக்குச் செல்வதை கடுமையாகப் பாதிக்கும்.

இதெல்லாம் சாத்தியமா

ஷார்ஜா போன்ற சிறிய மைதானங்களில் 149 ரன்களை அடித்துவிட்டு, வலிமையான வீரர்கள் இருக்கும் பஞ்சாப் அணியை சுருட்டுவது என்பது கொல்கத்தா அணி வானத்தில் ஏறி வைகுண்டம் போகும் கதைதான். ஷார்ஜாவில் நிச்சயம் 170 முதல் 180 ரன்கள்அடித்திருந்தால், எதிரணிக்கு நிச்சயம் நெருக்கடி கொடுத்திருக்க முடியும். இந்த ஸ்கோர் நிச்சயம் வெற்றிக்கு உதவாத ஸ்கோர்.

அதிலும் சுப்மான் கில், மோர்கன் ஓரளவுக்கு நின்று ஆடியிருக்கா வி்ட்டால், கொல்கத்தா அணியின் நிலை கந்தலாகியிருக்கும். அணியில் இருவரைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பொறுப்பற்ற துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர்.

மோர்கன் கப்டன்ஷிப் ஏற்றதிலிருந்து இதுபோன்று மோசமான தோல்விகளைச் சந்திப்பது கொல்கத்தா அணிக்கு வாடிக்கையாகி வருகிறது. தினேஷ் கார்த்திக் தலைமை இருந்தபோது அணியில் வீரர்கள் போராட்டக் குணத்தை வெளிப்படுத்தி எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தனர். ஆனால், அது தற்போது இல்லை.

தினேஷ் கார்த்திக் நடுவரிசையில், 6வது வீரராக களமிறங்கி அடித்து விளையாடக்கூடியவர். அவரை 3வது வீரராக களமிறங்கி தேவையில்லாமல் தினேஷ் கார்த்திக்கிற்கு நெருக்கடி கொடுத்து அவரின் விக்கெட்டை வீணடிக்கின்றனர்.

பந்துவீச்சிலும் எதிர்பார்த்த அளவுக்கு ஒருவரும் சிறப்பாகச் செயல்படவில்லை. கெயில் ஆட வந்தபின் அனைத்துப் பந்துவீச்சாளர்களும் வாங்கிக் கட்டிக்கொண்டனர். ஒட்டுமொத்தத்தில் கொல்கத்தா அணியின் துடுப்பாட்டம், பந்துவீச்சு இரண்டுமே தோல்விக்குக் காரணம்.

150 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. ராகுல், மன்தீப் சிங் ஆட்டத்தைத் தொடங்கினர். இருவரும் விக்கெட்டை இழக்கக்கூடாது, ரன்களையும் சேர்க்கவேண்டும் என்ற கவனமாக விளையாடினர். அவ்வப்போது ராகுல் சில பவுண்டரிகள் அடித்து 6 ரன்ரேட்டுக்கு குறையாமல் கொண்டு சென்றார். பவர்ப்ளேயில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் சேர்த்தது.

வருண் சக்கரவர்த்தி வீசிய 8வது ஓவரில் கால்காப்பில் வாங்கிய ராகுல் 28 ரன்னில் வெளியேறினார். அடுத்து யுனிவர்ஸ் பாஸ் கெயில் களமிறங்கி, மன்தீப்சிங்குடன் சேர்ந்தார். நிதானமாகத் தொடங்கிய கெயில் அதன்பின் அதிரடிக்கு மாறினார்.

அதிரடி ஆட்டம்

பந்துகளை நாலாபுறமும் சிக்ஸருக்கும், பவுண்டருக்கும் கெயில் பறக்கவிட்டார். கெயிலின் அதிரடியால் ஸ்கோரும் வேகமாக உயர்ந்தது, 14 ஓவரில் 100 ரன்களை பஞ்சாப் அணி எட்டியது

கெயிலைக் கட்டுப்படுத்த பலபந்துவீச்சாளர்களை மோர்கன் பயன்படுத்தியும் பலனில்லை. 25 பந்துகளில் கெயில் அரைசதம் அடித்தார், மன்தீப் சிங் 49 பந்துகளில் அரைசதம் அடித்தார். நிதானமாக ஆடிய கெயில் 51 ரன்னில் பெர்குஷன் பந்துவீச்சல் விக்கெட்டை இழந்தார்.

அடுத்து வந்த பூரன், மன்தீப் சிங் ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். மன்தீப் சிங் 66 ரன்னிலும், பூரன் 2 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 18.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்து பஞ்சாப் அணி வென்றது.

விக்கெட் சரிவு

முன்னதாக ரொஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. ராணா, கில் களமிறங்கினர். மக்ஸ்வெல் வீசிய முதல் ஓவரின் 2வது பந்தில் கெயிலிடம் கட்ச் கொடுத்து ராணா டக்அவுட்டில் வெளியேறினார். அடுத்து திரிபாதி வந்தார்.

ஷமி வீசிய 2வது ஓவரின் 4வது பந்தில் திரிபாதி 7 ரன்னில் ராகுலிடம் கட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார், அடுத்துவந்த தினேஷ் கார்த்திக் டக்அவுட்டில் அதே ஓவரில் வெளியேறினார்.

10 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து கொல்கத்தா தடுமாறியது. 4வது விக்கெட்டுக்கு மோர்கன், கில் ஜோடி சேர்ந்து அணியை மீ்ட்டனர். இருவரும் நிதானமாகத் தொடங்கி அதிரடிக்கு மாறினர். இருவர் இருக்கும் வரை ரன்ரேட் சீராகச் சென்றது.

பிஸ்னோய் வீசிய 10வது ஓவரில் மோர்கன் 40 ரன்னில் அஸ்வினிடம் கட்ச் கொடுத்து வெளியேறினார். 4வது விக்கெட்டுக்கு இருவரும் 80 ரன்கள் சேர்த்தனர்.

அதன்பின் நடுவரிசையில் முக்கி்ய வீரர்கள் யாரும் நிலைத்து விளையாடவில்லை. சுனில் நரேன்(6), நாகர்கோட்டி(6), கம்மின்ஸ்(1), வருண்(1) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது கொல்கத்தா அணி. கடைசி 58 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது கொல்கத்தா அணி.

பெர்குஷன் 24 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணி தரப்பில் ஷமி 3 விக்கெட்டுகளையும், ஜோர்டன், பிஸ்னோய் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here