தோட்ட மக்கள் 50 பேரின் 3 ஏக்கர் காணியை ஆட்டையை போட்ட பிரபல தொழிற்சங்கத் தலைவர்கள்

கண்டி மாவட்டம் தெல்தோட்டை பிரதேசத்திற்கு உட்பட்ட தெல்தோட்டை பகுதியில் பெருந்தோட்டங்களை சேரந்த 50 குடும்பங்களுக்கு வழங்க என வழங்கிய 03 ஏக்கர் காணியை மலையகத்தின் பிரபல தொழிற் சங்கங்களை சேர்ந்த தோட்ட தவைவர்கள் ஆட்டையை போட்டதால் 50 குடும்பங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

தெல்தோட்டை பிரதேசத்திற்கு உட்பட்ட லிட்டில்வெலி தோட்டம் மற்றும் கிறேட்வெலி தோட்டம் அரச தோட்டங்களாகும். இந்த தோட்டங்களை 2016 ஆம் ஆண்டு அரசாங்கம் தனியார் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளது.

இதனால் இந்த தோட்டத்தில் பரம்பரையாக வாழ்ந்து வந்த 160 குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேரும் நிலை ஏற்பட்டது. இதனால் தோட்ட மக்களுக்கும் காணி உரிமையாளருக்கும் முரண்பாடுகள் ஏற்பட்டு பொலிஸாரினதும் அரசியல்வாதிகளினதும் அரச அதிகாரிகளினதும் தலையீட்டால் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டது

இதன் தீர்வாக இவர்கள் இருக்கும் வீடுகள் இவர்களுக்கு சொந்தமாகவும் மேலும் தலா ஒரு குடும்பத்திற்கு 10 பேர்ச் காணி வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டு, இதன் பயனாக தற்போது லிட்டில்வெளி தோட்ட 110 குடும்பங்களுக்கு பிரித்துக் கொடுப்பதற்காக 07 ஏக்கர் காணி லிட்டில்வெளி நலன்புரிச் சங்கதத்திடம் அன்பளிப்பு உரித்து மூலம் வழங்கப்பட்டது. மிகுதியான கிறேட்வெலி தோட்டத்தை சேர்ந்த 50 குடும்பங்களுக்கு 03 ஏக்கர் காணி தோட்ட தலைவர்களான எஸ்.கமலதாசன், எம்.அதிஸ்ட்டம் போன்றவர்களிடம் அன்பளிப்பு உரித்து மூலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தற்போது கிறேட்வெலி தோட்ட 50 குடும்பங்களுக்கு என வழங்கப்பட்ட 03 ஏக்கர் காணியை பொறுப்பாக இருந்த தலைவர்கள் மக்களுக்கு பிரித்து கொடுக்காமல் வேறு நபர்களுக்கு பிரித்து விற்பனை செய்வற்கும் மிகுதியை தாங்கள் சொந்தம் கொண்டாடுவதற்கும் முயற்சிகளை மேற் கொண்டுவருவதால் 50 குடும்பங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். தற்போது இந்த காணிகளை தலா பேர்ச் 30,000 ரூபாவிற்கு விற்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டு வருகின்றன.

இந்த விடயம் தொடர்பில் குறித்த தலைவர் எம் அதிஸ்ட்டம் அவர்களிடம் வினவிய போது- “இந்த காணி எனக்கு கொடுத்தது. இதை நான் யாருக்கும் கொடுக்கமாட்டேன். நான் யாருக்கும் விற்பேன். இது தொடர்பில் கேள்வி கேட்பதற்கு நீ யார். நான் தோட்ட தலைவர். எனக்கு தான் முதலாளி கொடுத்தார். இதனை யாராலும் கேட்க முடியாது. என்னை சட்டத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“ என்று கூறினார்.

அன்பளிப்பு செய்த தோட்ட உரிமையாளரிடம் வினவிய போது- இந்த தோட்ட மக்களுக்கு நான் ஆரம்பத்திலிருந்து காணி வழங்குவதற்கு தீர்மானம் எடுத்திருந்தேன். சிலரின் எதிர்ப்பு மற்றும் பிரச்சனைகள் காரணமாகவும் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது 160 குடும்பங்களில் 110 குடும்பங்களுக்கு 07 ஏக்கர் காணி லிட்டில்வெளி நலன்புரிச் சங்கதத்திடம் அன்பளிப்பு செயய்பட்டுள்ளது. இவர்கள் இதனை பிரித்து கொடுப்பர். அதேபோல் மேலும் 50 குடும்பங்களுக்கு கிறேட்வெலி தோட்டத்தில் 03 ஏக்கர் காணியை தோட்ட தலைவர்களிடம் அன்பளிப்பு உரிமை மூலம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களும் இதனை 50 குடும்பங்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும். இதனை விற்க முடியாது. இந்த உரிமை அவ்வாறே வழங்கப்படடுள்ளது. அவர்கள் 50 குடும்பங்களுக்கு கட்டாயம் வழங்க வேண்டும். தவறின் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறினார்.

தற்போது இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கும், இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவிற்கும், காணி அமைச்சருக்கும், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும், அமைச்சர் மஹிந்தானந்தவுக்கும், தெல்தோட்டை பிரதேச செயலாளர், சுதுவெல்ல கிராம உத்தியோகத்தர் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கலஹா ஆகியோர்களுக்கு முறைபாடுகள் முன் வைக்கபட்டுள்ளன.

எது எவ்வாறாயினும் அப்பாவி மக்களுக்கு காணி கிடைக்க வேண்டும். இதற்கான தீர்வை சம்பந்தபட்ட அதிகாரிகள் முன் வந்து தீர்த்து கொடுக்க வேண்டும் என பாதிக்கபட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

-பா.திருஞானம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here