பல மாதங்களாக கைவரிசை காட்டி வந்த திருடன் சிக்கினான்

ராஜபாளையத்தில் பல மாதங்களாக கைவரிசை காட்டி வந்த திருடனை பிடித்த பொது மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 29-வது வார்டில் துரைச்சாமிபுரம், நெசவாளர் தெரு, அம்பலபுளி பஜார், முனியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக செல்போன் திருட்டு, இரு சக்கர வாகனம் திருட்டு, வீடு புகுந்து திருடுதல், பெட்ரோல் திருட்டு, ஜன்னல் ஓரம் தூங்குபவர்களின் கழுத்தில் இருந்து சங்கிலிகளை பறித்தல் போன்ற தொடர் குற்ற சம்பவங்கள் நடைபெற்று வந்தன.

மேலும் சில மாதங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் இது வரை குற்றவாளிகள் பிடிபடவில்லை.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு துரைசாமிபுரம் பகுதியின் பல்வேறு இடங்களில், அப்பகுதியினர் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெட்ரோல் திருடும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இதனையடுத்து கடந்த 3 தினங்களாக அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 20 பேர் இணைந்து, இரவு முழுவதும் காவல் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அதிகாலை 4 மணி அளவில் அப்பகுதியில் பெட்ரோல் கேனுடன் வந்தவரை நிறுத்தி விசாரித்த போது, அவன்தான் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தவன் என தெரிய வந்தது.

உடனே அவனை பிடித்த இளைஞர்கள் அருகில் இருந்த சமுதாய கூடத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். விசாரணையில் அவன் செங்குட்டுவன் தெருவை சேர்ந்த இசக்கி (வயது 35) என்பதும், இருசக்கர வாகன மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறான் என்பதும் தெரிய வந்தது.

பல ஆண்டுகளாக தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தவன் என்பதும், பல்வேறு வழக்குகள் இவன் மீது உள்ளதும் தெரிய வந்தது. அவனுக்கு தர்ம கொடுத்த அப்பகுதி பொதுமக்கள் தெற்கு போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இசக்கியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தனர். மேலும் அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here