தந்தை-மகன் கொலையை உறுதிப்படுத்தியது எப்படி?: சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை விவரம் வெளியானது

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலையை உறுதிப்படுத்தியது எப்படி என்பது தொடர்பாக மதுரை கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை விவரம் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஸ்ரீதர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை கடந்த மாதம் மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதன் முழு விவரம் வெளியாகாமல் இருந்தது.

இந்த நிலையில் தற்போது சாத்தான்குளம் வழக்கு குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றிருப்பது என்ன என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் பல்வேறு அதிர்ச்சி அளிக்கும் விவரங்களும் இடம்பெற்றுள்ளன. அதுபற்றிய விவரம் வருமாறு:-

சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக மத்திய தடயவியல் ஆய்வக நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர். அதில், கொலையுண்ட இருவருக்கும் இரத்தக்காயம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. சாத்தான்குளம் போலீஸ் நிலைய சுவரில் இருந்து சேகரிக்கப்பட்ட இரத்த மாதிரிகள் டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டன. அந்த இரத்த மாதிரியும், பென்னிக்ஸ், ஜெயராஜின் ஆடையில் இருந்த இரத்தக்கறையும் பொருந்தி உள்ளது. பென்னிக்ஸ் பயன்படுத்திய ஆடைகள், போலீஸ் நிலைய சுவர் மற்றும் இதர இடங்களில் சேகரித்த இரத்தக்கறை மாதிரிகள், அவருடைய தாயாரான செல்வராணியின் இரத்த மாதிரியுடன் ஒத்துப்போகிறது. இதன்மூலம் கடுமையாக தாக்கப்பட்டு அவர் இறந்ததும் உறுதிப்படுத்தப்படுகிறது.

ஆவணங்களில் முரண்பாடுகள்

இந்த இரட்டை கொலைகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு தொடர்பு உள்ளது. கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு நடத்திய விசாரணையில் கேமரா, செல்போன் உள்ளிட்ட ஆதாரங்கள் அடிப்படையில் 2 பேரும் போலீசாரால் தாக்கப்பட்டு, இரத்த காயம் அடைந்ததும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தொடக்க பதிவேடு, மருத்துவ பரிசோதனை அறிக்கை, கோவில்பட்டி சிறையில் அடைத்தது தொடர்பான பதிவுகள் போன்ற ஆவணங்களில் முரண்பாடுகள் இருப்பது தெரியவந்துள்ளன. சம்பவத்தின் போது முதலில் ஜெயராஜ் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு உள்ளார். “அவரை ஏன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்கிறீர்கள்” என பென்னிக்ஸ் கேட்டுள்ளார்.

“இந்த விவரத்தை போலீஸ்நிலையத்துக்கு வந்து கேட்டு தெரிந்து கொள்” என்று போலீசார் அப்போது கூறியுள்ளனர். அதன்பின் தனது நண்பர்களுடன் அவர் போலீஸ் நிலையம் வந்துள்ளார். அங்கு இருந்த போலீசாரிடம் விவரம் கேட்டபோது தான், அவருக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியுள்ளது. அதன்பின் ஆத்திரம் அடைந்த போலீசார் பென்னிக்சையும் கடுமையாக தாக்கி உள்ளனர்.

அரை நிர்வாணமாக்கினர்

போலீசாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பென்னிக்ஸ்க்கு எடுத்து கூறும்படி இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், மற்ற போலீஸ்காரர்களிடம் சொல்லி இருக்கிறார். அதை தொடர்ந்து பென்னிக்சை அரை நிர்வாணமாக்கி குனிய வைத்து பின்பகுதியில் கடுமையாக தாக்கி உள்ளனர்.

இதற்கிடையே தனக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருக்கிறது என்று ஜெயராஜ் கூறியும் அதை போலீஸ்காரர்கள் பொருட்படுத்தாமல் அவரையும் தாக்கி உள்ளனர். பின்னர் தந்தை-மகன் இருவர் மீதும் பொய் வழக்கு பதிவு செய்து உள்ளனர். போலீசார் தாக்கியதால் தரையில் சிதறிய இரத்தங்களை தூய்மை பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்து உள்ளனர்.

அதன்பின்னரே அவர்களை சிறையில் அடைக்க தேவையான மருத்துவ சான்றிதழை பெற்று உள்ளனர்.

தந்தை-மகன் இருவரையும் முறையாக பரிசோதனை செய்யாமல் சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் சான்றிதழ் வழங்கி உள்ளார். ஆனால் இருவரின் உடலில் இருந்த காயங்களை கோவில்பட்டி சிறையில் பதிவு செய்து உள்ளனர்.

இதுதொடர்பாக விசாரித்த மாஜிஸ்திரேட்டு, தனது அறிக்கையில் அவர்கள் இருவரின் உடல்களிலும் 18 இடங்களில் காயங்கள் இருந்ததாக தெரிவித்து உள்ளார்.

இவ்வாறு குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ. தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here