அடிமைச்சாசனம் எழுதப்பட்டதும் பட்டாசு கொளுத்தி கொண்டாடிய ஒரே ஆட்கள் பிள்ளையான் குழு மட்டும்தான்!

வடகிழக்கில் அபிவிருத்தியுடன் கூடிய உரிமை எனும் கருப்பொருளை நம்பி வாக்களித்த மக்கள் இன்று சனநாயக உரிமை பறிக்கப்பட்டு நட்டாற்றில் விடப்பட்டுள்ளார்கள். ஆனால், உரிமைக்காக வாக்களித்த மக்களின் வாக்குகளைப் பெற்றவர்கள் தமது மக்களின் நம்பிக்கையை காப்பாற்றியுள்ளார்கள். 20வது திருத்தத்திற்கு ஆதரவு பற்றிய பிரசாந்தனின் வியாக்கியானம் சர்வாதிகாரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் வித்தியாசம் தெரியாத வியாக்கியானம் என மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் தெரிவித்தார்.

20வது திருத்தத்திற்கு சிறுபான்மைப் பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்தமை தொடர்பில் இன்றைய தினம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தியை நம்பி ஏமாற்றப்பட்ட மக்கள் அந்த மாயையிலிருந்து விடுபட்டு உரிமையை பெற்ற பின்னர்தான் உண்மையான நிரந்தரமான அபிவிருத்தி சாத்தியப்படும் என்பதை புரிந்து கொண்டு உரிமைக்கான அரசியலுக்கு உரமாகவும் வரமாகவும் நிற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

20வது திருத்தத்திற்கு ஆதரவு பற்றி தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயலாளர் தெரிவித்த வியாக்கியானம் நகைப்புக்குரியது. சர்வாதிகாரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் வித்தியாசம் தெரியாத வியாக்கியானம். வெளவாலுக்கு வாழ்க்கைப் பட்டால் தொங்கித்தான் தீரணும் என்பது யதார்த்தமானது அவரது வியாக்கியானமும் அதனையே உணர்த்துகின்றது.

சிறுபாண்மையினரின் வாக்குகளாலேயே 20வது திருத்தம் வெற்றி பெற்றுள்ளது. 20 ஆதரவளித்த சிறுபான்மையினப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களித்த வடகிழக்கு மற்றும் மலையக கொழும்பு மக்களினது ஒட்டுமொத்த சுதந்திரம், சனநாயகம் விலைபேசி விற்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இந்த நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மையின மக்கள் எதிர்நோக்கப்போகும் அத்தனை இடர்களுக்கும் முழுப்பொறுப்பாளிகளாக இவர்களே அமைவார்கள் என்பதோடு, அப்போதும் இவர்கள் எதுவுமே பேசவோ, செய்யவோ வக்கற்று நிற்பார்கள் என்பதே உண்மை.

இவர்களை நம்பி வாக்களித்த இவர்களது மக்களையே நட்டாற்றில் விட்டு கரைசேந்து விட்டார்கள். நாளை இவர்களுக்கு ஏதும் நெருக்கடி ஏற்பட்டால் கூட இவர்களாலேயே அதிலிருந்து தப்பித்துக்கொள்ளவோ, மீளவோ முடியாத துர்ப்பாக்கிய நிலையை அவர்களே உருவாக்கிக்கொண்டுள்ளார்கள். இது அவர்களுக்கும் தெரிந்த விடயம்.

தமது சகாக்ளை ஆதரவாக வாக்களிக்க வைத்து தாம் எதிர்ப்பது போலவும் பாசாங்கு காட்டி ஹக்கீம், ரிசாட் சாதுரியமா காய்களை நகர்த்தியதோடு, தமதரசியல் இருப்பையும் தக்கவைத்து, தமது சகாக்களுக்கும் வாழ்வு கொடுத்துள்ளார்கள். அது அவர்களது பரம்பரை அரசியல். அதை எப்போதும் போல செய்துள்ளார்கள்.

இங்கே மோசமாக பாதிக்கப்பட்டது தமிழ் மக்களே குறிப்பாக வடகிழக்கில் அபிவிருத்தியுடன் கூடிய உரிமை எனும் கருப்பொருளை நம்பி வாக்களித்த மக்கள் சனநாயக உரிமை பறிக்கப்பட்டு நட்டாற்றில் விடப்பட்டுள்ளார்கள்.

உரிமைக்காக வாக்களித்த மக்களின் வாக்குகளைப் பெற்றவர்கள் தமது மக்களின் நம்பிக்கையை காப்பாற்றியுள்ளார்கள். அந்த மக்களின் ஆழ்மன எண்ணங்களை எதிர்பார்ப்புகளை பாராளுமன்றில் பறைசாற்றி 20 ஐ எதிர்த்துள்ளார்கள் 20 ஐ மட்டுமல்ல தமிழர்களின் உரிமைகளுக்கெதிரான எதையும் எதிர்ப்பதை முன்பதிவு செய்துள்ளார்கள்.

அபிவிருத்தியை நம்பி ஏமாற்றப்பட்ட மக்கள் அந்த மாயையிலிருந்து விடுபட்டு உரிமையை பெற்ற பின்னர்தான் உண்மையான நிரந்தரமான அபிவிருத்தி சாத்தியப்படும் என்பதை புரிந்து கொண்டு உரிமைக்கான அரசியலுக்கு உரமாகவும் வரமாகவும் நிற்க வேண்டும்.

20வது சட்டவாக்கம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதும், மட்டக்களப்பில் பட்டாசு வெடித்தது. தமக்கு அடிமை சாசனம் எழுதப்பட்டவுடன் பட்டாசு கொளுத்தி கொண்டாடிய ஒரே ஒரு அடிமைத்தனமான சமூகம் எமது மட்டக்களப்பு சமூகம் தான் என்பதையும் நிரூபித்திருக்கின்றார்கள் ஒரு சிலர் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here