பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில் இறுக்கமான சுகாதார நடைமுறைகள்; பொதுச் சந்தைகளை இடம் மாற்றவும் தீர்மானம்

பொதுமக்கள் ஒன்று கூடும் பொதுச் சந்தைகள், வியாபார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் இறுக்கமான சுகாதார வழிமுறைகளை பின்பற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதென மட்டக்களப்பு மாநகர சபையில் இடம்பெற்ற கொரொணா தடுப்பு செயலணிக் கூட்டத்தில் தீர்மாணிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கையானது சடுதியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மட்டக்களப்பு மாநகருக்குள் கொரோனா வைரஸ் தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று இன்று (26) மாலை மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.கே.குமாரசிறி, மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கா.சித்திரவேல், மண்முனை வடக்கு உதவிப் பிரதேச செயலாளர் ஜீ.அருணன், சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கிரிசுதன், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி. கே ஹெட்டிஹாராச்சி, மாநகர சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன் மற்றும் மாநகர பொதுச் சந்தை மேற்பார்வையாளர் எஸ்.பரணிதரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறிப்பாக பேலியகொடை மீன்சந்தைக்கு சென்று வந்தவர்கள் தொடர்பில் கண்டறிந்து அவர்களுக்கான பீ.சீ.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றமை தொடர்பிலும், பரவல் நிலைமைகள் குறித்தும் சுகாதார வைத்திய அதிகாரி இதன் போது தெளிவுறுத்தியிருந்தார்.

இதன்படி பேலியகொடை மீன்சந்தை தொடர்பில் சம்மந்தப்பட்ட தொற்றாளர்களுடன் நேரடி தொடர்பினை பேணியவர்கள் மட்டக்களப்பு மாநகருக்குள் இல்லை என்றாலும் முன்கூட்டியே இறுக்கமான சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும். மிக முக்கியமாக பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களான பொதுச் சந்தைகள், வியாபார நிலையங்கள், ஆலயங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் மட்டக்களப்பு மாநகருக்குள் கொரோனா தொற்று ஏற்படாத வகையில் சுகாதார திணைக்களம், மண்முனை வடக்கு பிரதேச செயலகம், பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றோடு இணைந்து பொதுமக்கள் கூடும் இடங்களில் கள விஜயங்களை மேற்கொண்டு சுகாதார வழிமுறைகள் தொடர்பில் ஆராய வேண்டும் என தெரிவித்த மட்டக்களப்பு மாநகர முதல்வர் வெளி மாவட்டங்களில் இருந்து மாநகருக்குள் வரும் வியாபாரிகளின் தகவல்களை சேகரித்து அவர்களை அவதானிக்க வேண்டும் என்றும் பொதுமக்களும் தமது பிரதேசங்களுக்கு வருகை தரும் நபர்கள் தொடர்பிலான தகவல்களை உரிய நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

மேலும் நாளை முதல் பொதுச் சந்தையை திறந்தவெளியில் நடாத்துவதென்றும், விரத நாட்களில் ஆலயங்களில் பொது மக்கள் கூடுவதனை கட்டுப்படுத்துவதோடு, திருமண நிகழ்வுகளுக்கும் நிபந்தனைகளுடனான அனுமதிகளை வழங்குவதென்றும் இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here