குடிநீர்த்திட்டம் திறந்து வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் அம்பலவன் பொக்கணை கிராம மக்களுக்கான சுத்திகரிக்கப்பட்ட தூய குடிநீர் விநியோகத் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அம்பலவன்பொக்கணை கிராமத்தில் மக்களினுடைய குடிநீர்த் தட்டுப்பாடு மற்றும் தூய குடிநீர் இன்மை போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் முகமாக பெரண்டினா நிறுவனத்தினால் அம்பலவன்பொக்கணை மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் ஊடாக குறித்த குடிநீர் வழங்கும் திட்டம் நடைமுறைப் படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதற்குரிய கட்டடம் அமைக்கப்பட்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த இந்த திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு  அம்பலவன்பொக்கணை கிராமத்தில் இடம்பெற்றது.

கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் இ.கஜுதரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கணேஸ்வரன் மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் க. தவராசா மற்றும் பெரண்டினா நிறுவனத்தின் உடைய உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர் மற்றும் கிராம அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சுகாதார நடைமுறைகளை பேணி மிகக் குறைந்தளவானவர்களுடைய பங்குபற்றலுடன் இந்த நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த குடிநீர் திட்டத்திற்கான கட்டிடம் அமைப்பதற்காக புலம்பெயர்ந்து லண்டன் நாட்டில் வாழ்கின்ற வரதேஸ்வரன் நதியா என்பவர் 4 இலட்சம் ரூபா நிதி பங்களிப்பினை வழங்கியிருந்தார்.

இந்நிலையில் குறித்த குடிநீர் சுத்திகரிப்புக்கான இயந்திர தொகுதிகளுக்கு பெரண்டினா நிறுவனம் 16 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்களை பொருத்தி இந்த திட்டத்தை இன்று நடைமுறைப்படுத்துவதற்கு உதவியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here