அட்டன் நகரில் உள்ள அனைத்து கடைகளுக்கும் பூட்டு

அட்டன் – டிக்கோயா நகர சபைக்குட்பட்ட அட்டன் பிரதான நகரத்தில் மீன் கடை ஒன்றிற்கு பேலியகொட மீன் சந்தையிலிருந்து மீன்களை விற்பனைக்காக கொள்வனவு செய்து கொண்டு வந்த அந்த மீன் கடையை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று எற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த நபருக்கு முன்னெடுக்கபட்ட பீ.சி.ஆர் பரிசோதனை மூலம் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று (25) நகரத்திற்கு வருகை தந்த மக்கள் விடயம் அறிந்து பதற்றத்திற்குள்ளாகினர். அதேநேரத்தில் திடீரென கடைகள் மூடப்படும், அட்டன் நகரம் முடக்கப்படும் என்ற அச்சத்தினால் பதற்றத்திற்குள்ளாகிய மக்கள், பொருட்களை கொள்வனவு செய்வதில் முந்தியடித்ததை காணக்கூடியதாக இருந்தது.

அதேநேரம் மக்களின் நலன் கருதி அட்டன் டிக்கோயா நகர சபை துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து சிறிது நேரம் கடை வியாபாரங்களை முன்னெடுக்க வாய்ப்பினை அளித்தது. இதன்போது மக்கள் பொருட்களை கொள்வனவு செய்து கொண்டு விரைவாக நகரத்தை விட்டு வெளியேறினார்கள்.

அட்டன் பொலிஸாரின் ஊடாக நகர சபையும் இணைந்து பொது மக்களுக்கு கொரோனா தொற்று தொடர்பில் விழிப்புணர்வை எற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதன்போது நகரத்தின் அனைத்து கடைகளையும் மூட வேணடும் என அறிவித்ததையடுத்து அட்டன் நகரில் உள்ள கடை உரிமையாளர்கள் தங்களது கடைகளை மூடினர்.

இதனை தொடர்ந்து அட்டன் நகர சபை ஊடாக அட்டன் நகரத்தில் குறித்த மீன் கடை பகுதிகளுக்கும், நகரத்தின் கடைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் தொற்று நீக்கி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு நகரம் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

க.கிஷாந்தன்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here