வாழைச்சேனையில் ஊரடங்கு அமுல்!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதால் எவரும் வீதிகளில் நடமாட கூடாது எனவும், நடமாடுபவர்களுக்கு எதிராக சட்ட நவடிக்கை எடுக்கப்படும் என்று வாழைச்சேனை பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் வழங்கி வருகின்றனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பதினொரு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் வாழைச்சேனை பொலிஸ் பகுதிகளில் வசிக்கும் ஏனைய பொதுமக்களிடம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்துள்ள அனைத்துச் செயற்பாடுகளுக்கும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறு ஒலிபெருக்கி மூலம் பொலிஸார் அறிவித்தல் விடுத்து வருகின்றனர்.

வாழைச்சேனை பொலிஸ் பகுதிகளில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அரசாங்கம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்துள்ள நிலையில் சட்டத்தினை மீறி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை நிறுத்திக் கொள்ளுமாறு பொலிஸார் கோரியுள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போது அதையும் மீறி சிலர் செயற்படுவதாகவும், குறிப்பாக இளைஞர்கள் கட்டுக்கடங்காமல் மோட்டார் சைக்கிள்களில் தேவையின்றி சுற்றித் திரிவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் திரிபவர்களை கைது செய்து கொரோணா வைரஸ் பாதுகாப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் பிரகாரம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தி தண்டனை வழங்கப்படும் என்றும், பிரதேச மக்களின் நன்மை கருதி அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு வாழைச்சேனை பொலிஸார் கேட்டுக் கொள்கின்றனர்.

இது வரை 11 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் நேற்று (சனிக்கிழமை) 20 பேருக்கும் இன்று ஞாயிற்றுக்கிழமை 80 பேருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை இடம்பெற்று வருவதாகவும் அதன் உத்தியோக பூர்வ முடிவுகள் பெறப்பட்ட பின்னர் மேலதிக எண்ணிக்கை தொடர்பான விபரம் அறிவிக்கப்படும் என உதவி பொலிஸ் அத்தியட்ச்சகர் ஜீ.எஸ்.ஜெயசுந்தர தெரிவித்தார்.

பெலியகொட மீன் சந்தைப் பகுதிக்கு வியாபார நடவடிக்கைக்காக சென்று வந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்பு பட்டவர்களை கண்டறியும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.எம்.ஜெயசுந்தர தெரிவித்தார்.

இதேவேளை மேற்படி விடயம் தொடர்பாக சனிக்கிழமை காலை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் விசேட கலந்துரையாடல் உதவி பொலிஸ் அத்தியட்ச்சகர் தலைமையில் நடைபெற்றது.

பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் பொதுச் சௌக்கிய பரிசோதகர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நோயினை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பன தொடர்பான முன்னெச்செரிக்கை விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. வாழைச்சேனை, பிறைந்துறைச்சேனை, செம்மன் ஓடை, மீராவோடை போன்ற கிராமசேகர் பிரிவைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்னர்.

பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணி, முகக் கவசம் அணிந்து, சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறும், வீதிகளில் தேவையில்லாமல் செல்வதனை தவிர்க்குமாறும், அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் இருந்தால் சுகாதார பிரிவினர் மற்றும் பொலிசாருக்கு தகவல் வழங்குமாறும் இதன்போது கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதேவேளை வாழைச்சேனை மீன் பிடி துறைமுகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தகவல் அறிந்த பொதுமக்கள் அச்சமடைந்து காணப்பட்டனர். வாழைச்சேனை சந்தைப் பகுதியில் முண்டியயடித்துக்கொண்டு பொருட்களை வாங்கினர். தொற்றாளர்கள் இனம் காணப்பட்டதனையடுத்து பிரதேசத்தில் மக்கள் கூடும் பொது இடங்களில் தொற்று நீக்கி நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. வாழைச்சேனை துறைமுகம், ஓட்டமாவடி மீன் சந்தைப் பகுதிகளில் பொலிசார் இவ் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

தண்ணீர் பீச்சும் இயந்திரத்தின் உதவியுடன் இவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here