யாழ், கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள்: சாவகச்சேரி யுவதி சென்றதால் சிறுவர் இல்லமும் தனிமைப்படுத்தப்பட்டது!

நெடுங்கேணி வீதி அபிவிருத்தி தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் பணியாற்றிய
யாழ்ப்பாணம், கிளிநொச்சியை சேர்ந்த மூவர் இன்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வவுனியா வடக்கு நெடுங்கேணியில் வீதி அபிவிருத்திப் பணியில்
ஈடுபட்டிருக்கும் மாகா நிறுவனத்தில் பணியாற்றிய கிளிநொச்சி உதயநகர்
கிழக்கைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு கொரோனா தொற்று
உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்த வீதி அபிவிருத்திப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் நிறுவனம் ஒன்றில்
மூன்று நபர்களுக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையினை தொடர்ந்து
அங்கு பணியாற்றியவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்
தனிமைப்படுத்தப்பட்டனர். அந்த வகையில் குறித்த இளைஞனும் அவரது
குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்த நிலையில்
இன்று கிடைக்பெற்ற பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் படி குறித்த இளைஞனுக்கு
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பொறியியலாளர்கள் இன்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அவர்களும் நெடுங்கேணி மாகா நிறுவனத்தின் பணியாற்றியவர்கள்.

சாவகச்சேரி பகுதியை சேர்ந்த யுவதியான பொறியியலாளர் ஒருவரும், வல்வெட்டித்துறையை சேர்ந்த ஆண் பொறியியலாளர் ஒருவருமே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

சாவகச்சேரி யுவதி, கடந்த ஞாயிற்றுக் கிழமை கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள விசேட தேவையுடைய சிறுவர் இல்லத்திற்கு வந்து சென்றுள்ளார். இதனையடுத்து குறித்த சிறுவர் இல்லம் மற்றும் அங்கு பணியாற்றுகின்றவர்கள் அவர்களின் குடும்பங்கள் ஆகியோர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யுவதியின் தாயார் கடந்த 19ஆம் திகதி யுவதியை சென்று பார்வையிட்டதால், தாயாரும், தாயாருடன் தொடர்பிலிருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வல்வெட்டித்துறை பொறியியலாளர் அண்மையில் சொந்த இடத்திற்கு வந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே தற்போது கொரோனா தொற்று பரவல் நிலைமையினை கருத்தில் எடுத்து பொதுமக்கள் வெளியில் நடமாடுவதனை முடிந்தளவு தவிர்க்குமாறும், கண்டிப்பாக
முககவசம் அணிவதோடு, சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றுமாறும் சுகாதார
துறையினர் கோரிவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here