4 இலட்சத்திற்கு பில் கொடுத்த அமைச்சர்: என்ன செய்யப் போகிறது கணக்காய்வுகுழு?

0

வடக்கு சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் தொடர்பான இன்னொரு சர்ச்சை மாகாண கணக்காய்வுகுழுக்குள் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டதாக குறிப்பிட்டு ஒப்படைத்த பற்றுச்சீட்டுக்கள் போலியானவை என்பதை கணக்காய்வுகுழு கண்டறிந்த செய்தியை தமிழ்பக்கம் ஏற்கனவே வெளியிட்டிருந்தது.

அந்த செய்தியை தவறவிட்டவர்கள் இங்கு அழுத்தி படிக்கவும்.

வடமாகாணசபை உறுப்பினர்களிற்கான குறித்தொதுக்கப்பட்ட நிதியில் பல்வேறு திட்டங்களிற்கு பணம் ஒதுக்கப்படுவது வழக்கம். மாகாணசபை உறுப்பினர்கள் திட்டங்களை பரிந்துரைக்க, அந்த நிதி உரிய திணைக்களங்களின் ஊடாக சேவை வழங்குனர்களிற்கு வழங்கப்படும்.

2017ஆம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன், நான்கு இலட்சம் ரூபா செலவில் மன்னாரில் மூக்கு கண்ணாடி வழங்கியிருந்தார் என மன்னார் பிராந்திய சுகாதார திணைக்களத்தில் பற்றுச்சீட்டு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

பொதுகணக்காய்வு குழுவின் கணக்காய்வின் போது, குறித்த பற்றுச்சீட்டு வழங்கப்பட்ட வியாபார நிலையத்தின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டபோது, அது அழகுசாதான விற்பனை நிலையம் என்ற விடயம் வெளிச்சத்திற்கு வந்தது என்ற தகவலை அந்த திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார். அழகு சாதான விற்பனை நிலையத்தில் மூக்கு கண்ணாடிகள் கொள்வனவு செய்யப்பட்டதாக வடக்கு சுகாதார அமைச்சரினால் போலி பற்றுச்சீட்டு சமர்ப்பிக்கப்பட்ட விடயம் அம்பலமானது.

இதையடுத்து, குறித்த நான்கு இலட்சம் ரூபாவும் அமைச்சரின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் வழங்கப்படாமல், மாகாண நிதியில் வரவு வைக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது மாகாண கணக்காய்வுக்குழுவிற்கு சுகாதார அமைச்சர் சார்பில், மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டவர்கள் என்ற பட்டியல் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பொது கணக்காய்வுகுழுவின் அவதானிப்பின் படி, மாகாணசபை உறுப்பினருக்கான குறித்தொதுக்கப்பட்ட நிதி, மாகாண கணக்கில் வரவு வைக்கப்பட்டு விட்டது. அதை இனி மீளளிக்க சட்ட ஏற்பாடுகள் இல்லை. எனினும், அமைச்சரின் பட்டியல சமர்ப்பிக்கப்பட்டதற்கு மாகாண அதிகாரிகள் இதுவரை எந்த பதிலும் வழங்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here