பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் அடுத்தடுத்து தப்பியோட முயன்று சுடப்பட்டதன் எதிரொலி: நீதிமன்றத்தை நாடினார் பொடி லெசி!

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதால் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட கோரி பாதாள உலகத் தலைவர் என கருதப்படும் ஜனித் மதுசங்க எனப்படும் பொடி லெசி தனது சட்டத்தரணிகள் ஊடாக தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தல் கடிதம் அனுப்பியுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தவிசாளர் நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் மற்றும் யோஷித ராஜகருணா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள பூசா சிறைச்சாலை அதிகாரி, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், பதில் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக அறிவித்தல் கடிதத்தை அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது.

தான் குற்றச் செயல்கள் பலவற்றுடன் தொடர்புடையவர் என்பதால் பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொடி லெசி தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதனல் அங்கு தமக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக கூறியுள்ள மனுதாரர், ஆகவே தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துவது சிறைச்சாலை அதிகாரிகளின் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.

அதனால் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட கோரி மனுதாரர் தனது மனுவின் மூலம் கேட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here