மட்டக்களப்பில் சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்களிற்கு வழங்கப்பட்ட தண்டனை!

மட்டக்களப்பு – பனிக்கையடி பகுதியில் 06 வயது சிறுமியை கடத்திச்சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு 09 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி M.Y.M.இஸ்ஸதீன் நேற்று இந்த தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டார்.

2011 ஆம் ஆண்டு குறித்த சிறுமியை கடத்திச்சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக 64 வயதான சந்தேகநபருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

குற்றச்சாட்டு நிரூபணமாகியதால், குற்றவாளிக்கு 09 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், 50,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நட்டஈடு மற்றும் அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 06 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என குற்றவாளிக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவருக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 02 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிக்கு 5000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அபராதத்தை செலுத்த தவறினால் 06 மாதங்கள் சிறைத்தண்டனையும் நட்ட ஈட்டை செலுத்த தவறினால் மேலும் 01 வருட கடூழிய சிறைத்தண்டனையும் அனுபவிக்க நேரிடும் என நீதிபதி M.Y.M.இஸ்ஸதீன் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பு – வாழைச்சேனை, மீராவோடை பகுதியில் சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவருக்கு 02 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு 14 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக 58 வயதான ஒருவருக்கு எதிராக குற்றஞ்சுமத்தப்பட்டது.

குற்றவாளிக்கு 02 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, 5000 ரூபா அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஒரு இலட்சம் ரூபா நட்ட ஈடு செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு தொடுநர் சார்பில் அரச சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் மன்றில் ஆஜராகியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here