கெய்லுக்கு பந்துவீச முன்னர் இரண்டு கால்களையும் சேர்த்து கட்டிவிட வேண்டும்: அஸ்வின்!

பஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்ல் இடம்பெற்ற பின் அந்த அணிக்கு புது உத்வேகம் கிடைத்து அபார வெற்றிகளைக் குவித்து வருகிறது.

அன்று டெல்லி கப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 164 ரன்கள் இலக்கை விரட்டி கிங்ஸ் லெவன் பஞ்சாப் 167/5 என்று வெற்றி பெற்றது.

அந்த போட்டியில் கிறிஸ் கெய்ல் இறங்கியவுடன் தோனி போல் அஸ்வினைக் கொண்டு வந்திருந்தால் தொடக்கத்திலேயே அவரை வீழ்த்தியிருக்கலாம். ஆனால் இடையில் தேஷ்பாண்டே வீச கெய்ல் மட்டையிலிருந்து பவுண்டரி, சிக்சர் மழை பொழியத் தொடங்கி அந்த ஓவரில் மட்டும் 26 ரன்கள் வந்தது.

உடனே அஸ்வினைக் கொண்டு வந்தார் டெல்லி கப்டன் ஷ்ரேயஸ் அய்யர். ரவுண்ட் த விக்கெட்டில் ‘ஆர்ம் போல்’ வீச கெய்ல் அதை வாரிக்கொண்டு அடிக்கப்போக பந்து இடையில் புகுந்து போல்ட் ஆனது.

இதற்கு முன்னதாக கெய்லின் அவிழ்ந்த ஷூ லேஸை அஸ்வின் அவருக்கு சரி செய்து விட்டார். இதன் புகைப்படத்தை ட்விட்டர் தளத்தில் வெளியிட்டார் அஸ்வின்.

அதில் சிரிக்கும் இமோஜிக்களைப் பதிவிட்ட அஸ்வின், ‘கெய்ல் அபாயகரமானவர். அவருக்கு பந்து வீசும் முன் இரு கால்களையும் சேர்த்துக் கட்டி விட வேண்டும். இந்தப் போட்டி எங்களுக்குக் கடினமாக இருந்தது, இனி வரும் போட்டிகளில் வலுவாக மீண்டு வருவோம்’ என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here