அறிஞரின் கருத்தை பகிர்ந்தமைக்கும் கட்சியை விட்டு நீக்கமா?: முன்னணிக்கு எதிராக மற்றுமொருவர் வழக்கு!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (தமிழ் தேசிய மக்கள் முன்னணி) அண்மைக்காலமாக மணிவண்ணன் ஆதரவாளர்களை தொடர்ந்து களையெடுத்து வரும் நிலையில், இன்று முதன்முறையாக சட்டரீதியான தடைக்கல்லை எதிர்கொள்ளவுள்ளது.

கட்சியிலிருந்தும், யாழ் மாநகரசபை உறுப்புரிமையிலிருந்தும்- மணிவண்ணன் ஆதரவாளர் என்ற ஒரே காரணத்திற்காக நீக்கப்பட்டமைக்கு எதிராக- ம.மயூரன் இன்று (22) வழக்கு தாக்கல் செய்கிறார்.

யாழ் மாநகரசபை உறுப்பினரான மயூரனை கட்சியை விட்டு நீக்கியதுடன், மாநகரசபை உறுப்புரிமையை நீக்கும்படி தெரிவத்தாட்சி அலுவலரிற்கு தமிழ் காங்கிரஸ் கடிதம் எழுதியது.

இதை ஏற்றுக்கொண்ட தெரிவத்தாட்சி அலுவலர், மயூரனின் மாநகரசபை உறுப்புரிமை இல்லாமல் ஆனதை நேற்று (21) கடிதம் மூலம் அறிவித்தது.

தமிழ் காங்கிரசின் நடவடிக்கை எந்த முகாந்திரமும் இல்லாதது, அறிஞர் ஒருவரின் கருத்தை பேஸ்புக்கில் பகிர்ந்தது ஏன் என்றுதான் காங்கிரஸ் விளக்கம் கோரியது என அவர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று யாழ்ப்பாணத்தில் மயூரன் வழக்கு தாக்கல் செய்யவுள்ளார். அவர் சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணனே முன்னிலையாகுவார்.

தன்னை கட்சியை விட்டு நீக்கியதற்கு எதிராக மணிவண்ணன் அடுத்த வாரம் வழக்கு தொடர்வார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here