லீ குவான் யூவாக மாற ஆசைப்பட்டால் மட்டும் போதாது; சிங்கப்பூரில் பக்கச்சார்பான தலைவராக அவர் இருக்கவில்லை: கோட்டாவிற்கு சாட்டையடி கொடுத்த விக்னேஸ்வரன்!

நீதித்துறை, காவல்த்துறை மற்றும் பொது அலுவலர் சேவை ஆகியனவற்றை சுதந்திரமாக செயலாற்றவிட்டிருந்தால் ஏப்ரல் அனர்த்தம் நடைபெற்றிராது.
உலகில் அநேகமான நாடுகளில் ஜனாதிபதி முறை ஆட்சி இல்லை. அப்படியாயின் அந்த நாடுகளில் எல்லாம் பாதுகாப்புப் பிரச்சனை இருக்கின்றதா? அல்லது ஜனாதிபதி முறையுள்ள நாடுகளில் பாதுகாப்பு பிரச்சினைஇல்லாமல் இருக்கின்றதா? ஆகவே மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதைத் தவிர்த்து இந்நாட்டின் சாபமாக உள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை முற்றாக களைந்து மக்களுக்கு நேரடியாகப் பொறுப்புக்கூறக் கூடிய சட்டத்தின் ஆட்சியை பலப்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன்.

இன்று (21) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 20வது திருத்தம் மீதான இரண்டாவது வாசிப்பு விவாதத்தில் உரையாற்றும் போது இதனை தெரிவித்தார்.

லீ குவான் யூ க்களாகப் பரிணமிக்க விரும்புபவர்கள் தமது பக்கச்சார்பான சிந்தனைகளைக் கைவிட்டால்த்தான் நாட்டிற்கு நன்மை செய்யலாம். லீ குவான் யூ சீன பௌத்த பாதையில் செல்லவில்லை. அவர் சிங்கப்பூர் மக்கள் அனைவரையும் நேசித்தவர். சிறுபான்மையினரை பயங்கரவாதிகள் என்று சித்தரிப்பது பெரும்பான்மையினரிடம் இருந்து வாக்குகளைப் பெற்றுக் கொடுக்கும். ஆனால் நாட்டை முன்னேற்றவிடாது என கோட்டாபய ராஜபக்சவிற்கும் சாட்டையடி கொடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத்தியில் ஒவ்வொரு கட்சியும் ஆட்சிப்பீடம் ஏறும் போது நாட்டைப் பற்றிச் சிந்திக்காது, நாட்டு நலன்கள் பற்றிச் சிந்திக்காது தமது கட்சிகளின், அங்கத்தவர்களின், ஆதரவாளர்களின் நலன்களை முதன்மைப்படுத்தி சட்டங்களை இயற்றிவருவது இந் நாட்டின் துரதிஷ்ட வரலாறாகத் தொடர்ந்து வந்துள்ளது. லீ குவான் யூ க்களாகப் பரிணமிக்க விரும்புபவர்கள் தமது பக்கச்சார்பான சிந்தனைகளைக் கைவிட்டால்த்தான் நாட்டிற்கு நன்மை செய்யலாம்.

லீ குவான் யூ சீன பௌத்த பாதையில் செல்லவில்லை. அவர் சிங்கப்பூர் மக்கள் அனைவரையும் நேசித்தவர். சிறுபான்மையினரை பயங்கரவாதிகள் என்று சித்தரிப்பது பெரும்பான்மையினரிடம் இருந்து வாக்குகளைப் பெற்றுக் கொடுக்கும். ஆனால் நாட்டை முன்னேற்றவிடாது. ஆகவே அதிகாரத்தைத் தனிமனிதர் ஒருவரிடம் குவிக்கும் எண்ணத்துடன் தான் இந்த 20வது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்திற்கும் மனித உரிமைகளுக்குஞ் சாவு மணி அடிக்கப் போகின்றது.

மனித நாகரிகம் முன்னேற முன்னேற எவ்வாறு ஜனநாயகப் பண்புகளை மேலும் மேம்படுத்தி மனித உரிமைகள், சமத்துவம் மற்றும் சகவாழ்வுடன் கூடிய வாழ்க்கையினை ஏற்படுத்தலாம் என்று உலக நாடுகள் சிந்தித்துச் செயற்பட்டுவரும் இந்தவேளையில் ஜனநாயகத்துக்கு சாவு மணி அடித்து நல்லாட்சிக்குரிய பண்புகளை குழிதோண்டிப் புதைக்கும் விசித்திரம் இந்த நாட்டில் இடம்பெறுகின்றது.

ஜனநாயகத்தில் இருந்து சர்வாதிகாரத்தை நோக்கி ஆட்சிப் பண்புகளின் பரிணாமம் திசை மாறுவதற்கான காரணம் வெறுமனே பதவி மோகம் என்று மட்டும் நான் பார்க்கவில்லை. எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சில அரசியல் நிகழ்வுகளுக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையாகவே நான் இதனைப் பார்க்கின்றேன்.

தமிழ் மக்கள் தம் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் மேற்கொண்டு வரும் ஜனநாயக ரீதியான போராட்டங்களை மேற்கொள்வதற்கு இன்று ஒரு சில ஜனநாயக இடைவெளிகள் காணப்படுகின்றன. அவற்றையும் அடைத்து இரும்புக்கரம் கொண்டு எமது போராட்டத்தை நசுக்குவதற்கான ஒரு நிகழ்ச்சித் திட்டமும் இதன் பின்னால் இருப்பதாக நான் கருதுகின்றேன்.

ஜனாதிபதி செயலணி என்ற அமைப்புக்களின் கீழ் சிறுபான்மையினரின் காணிகள் திணைக்களங்களினால் கையேற்கப்படுகின்றன. பாதுகாப்பு என்ற போர்வையின் கீழ் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட படையினர் தமிழ்ப்பேசும் மக்கள் தமது உணர்வுகளையும் அபிலாஷைகளையும் வெளிக்கொண்டு வராது அவர்களைக் கட்டுப்படுத்த வடக்கு கிழக்கில் குவிக்கப்பட்டுள்ளார்கள். வனத் திணைக்களம் போன்றவை மக்களின் பாரம்பரிய காணிகளைக் கையேற்றுக் கொண்டிருக்கின்றனர்.

அரச அரவணைப்பின் பின்னணியில் சட்டத்திற்குப் புறம்பாக எமது வளங்கள் சூறையாடப்பட்டுவருகின்றன. மகாவலித் திட்டத்தின் கீழ் பிற மாகாண மக்கள் எங்கள் மாகாணங்களில் குடியேற்றப்பட்டு வருகின்றனர். ஆனால் வாக்குறுதி அளித்தவாறு மகாவலி நீர் ஒரு சொட்டேனும் வடக்கு நோக்கி இன்று வரையில் வரவில்லை. எமது எந்திரிகளின் கூற்றுப்படி அது என்றுமே வராது. இது தான் வடக்கு கிழக்கின் இன்றைய நிலைமை.

கடந்த 20 வருடங்களாக இனப்பிரச்சனையை மையப்படுத்திய புதிய அரசியலமைப்பைக் கொண்டு வரப்போவதாக மக்களிடத்தில் ஆணைகேட்டு ஆட்சிபீடம் ஏறிய எவரும் அதனை நிறைவேற்ற முன்வரவில்லை. அதேபோல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக ஆணைகேட்டு ஆட்சிபீடம் ஏறிய எவருங் கூட அதனையும் நிறைவேற்றவில்லை. ஆனால், இந்த அரசாங்கம் கடந்த உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலானது ஏதோ நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டதனால் ஏற்பட்ட சம்பவமாக உருவகித்து ஜனாதிபதியின் அதிகாரத்தை மேலும் கூட்ட முனைகின்றது.

இதனால்த்தான் ஜனாதிபதி கட்டுப்பாடற்ற அதிகாரங்களைப் பெற வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஒரு கள்வனையோ அல்லது ஒரு குண்டுதாரியையோ பிடிக்க வேண்டுமாக இருந்தால் நிறைவேற்று ஜனாதிபதி இருந்தால்தான் பிடிக்க முடியும் என்ற இந்த சிந்தனை முட்டாள்த் தனமானதாக அல்லவா இருக்கின்றது. உண்மையில் ஏப்ரல் சம்பவம் இடம்பெறுவதற்கு பாதுகாப்பு மற்றும் படை அதிகாரிகளின் அசட்டையீனமும் மேலும் பாதுகாப்புத்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்தமையுமே பிரதான காரணங்களாவன.

நீதித்துறை, காவல்த்துறை மற்றும் பொது அலுவலர் சேவை ஆகியனவற்றை சுதந்திரமாக செயலாற்றவிட்டிருந்தால் ஏப்ரல் அனர்த்தம் நடைபெற்றிராது.
உலகில் அநேகமான நாடுகளில் ஜனாதிபதி முறை ஆட்சி இல்லை. அப்படியாயின் அந்த நாடுகளில் எல்லாம் பாதுகாப்புப் பிரச்சனை இருக்கின்றதா? அல்லது ஜனாதிபதி முறையுள்ள நாடுகளில் பாதுகாப்பு பிரச்சினைஇல்லாமல் இருக்கின்றதா? ஆகவே மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதைத் தவிர்த்து இந்நாட்டின் சாபமாக உள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை முற்றாக களைந்து மக்களுக்கு நேரடியாகப் பொறுப்புக்கூறக் கூடிய சட்டத்தின் ஆட்சியை பலப்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும். நீதித் துறை, பொலிஸ் துறை மற்றும் பொது அலுவலகர் சேவை போன்ற அலகுகளின் சுயாதீனத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றி சிந்திப்பதே நாட்டைப் பற்றி நேசிக்கும் ஒவ்வோருவரின் கடமையாகும்.

நீதித்துறை, காவல்த்துறை மற்றும் பொது அலுவலர் சேவையை ஒரே நிறைவேற்று ஜனாதிபதியின் மேற்பார்வையின் கீழ்க் கொண்டுவருவது பாரிய எதிர்விளைவுகளை எதிர்காலத்தில் உண்டாக்கும்.

இந்த அரசு இன்னும் 6 மாதகாலத்தில் புதிய அரசியல் அமைப்பைக் கொண்டுவர உள்ளதாக தெரிவிக்கும் போது இத்தகைய ஒரு சட்ட திருத்தத்தை அவசரகதியில் கொண்டுவர முனைவதானது அவர்களுக்கு பின்னால் இருக்கும் இரகசிய நிகழ்ச்சி நிரல் ஒன்று இருப்பதையே தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here