கொரோனா தடுப்பு மருந்து வருவதற்குள் 50 கோடி ஊசிகளை இருப்பு வைக்க யுனிசெப் அமைப்பு நடவடிக்கை

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சந்தைக்கு வருவதற்குள், 50 கோடி ஊசிகளை (சிரிஞ்ச்) இருப்பு வைக்க யுனிசெப் அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா வைரஸை ஒழிக்கும் தடுப்பு மருந்து தயாரிப்பில் பல நாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தடுப்பு மருந்துகள் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், உலகளவில் கொரோனா மருந்து பரவலாக கிடைக்கவும், மக்களுக்கு மருந்து செலுத்துவதற்குத் தேவையான ஊசிகளை இருப்பு வைக்கவும் ஐ.நா. சபையின் கீழ் செயல்படும் ‘ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம்’ (யுனிசெப்) நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுகுறித்து யுனிசெப் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வது, அதற்கேற்ப விநியோகத்தை திட்டமிடுவது, மருந்து செலுத்துவதற்குத் தேவையான ஊசிகளை இருப்பு வைப்பது போன்றவற்றுக்கு உதவுவதற்காக யுனிசெப் நடவடிக்கை எடுத்து வருகிறது. வரும் 2021-ம் ஆண்டுக்குள் 100 கோடி ஊசிகளை, கிடங்குகளில் தயார் நிலையில் வைக்க யுனிசெப் திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக 52 கோடி ஊசிகளை கிடங்குகளில் இருப்பு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை எல்லாம் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சந்தைக்கு வருவதற்குள் செய்து முடிக்கப்படும்.

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகள் முடிந்து, மனிதர்களுக்கு செலுத்துவதற்கான அனுமதி கிடைத்தவுடன், ஊசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக இப்போதே ஊசிகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here