மாக்கந்துரே மதுஷ்: இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட தாய்…மாளிகாவத்தையில் முடிந்த கோட்பாதரின் கதை!

சமரசிங்க ஈராச்சிலாகே மதுஷ் லக்சித பிப்ரவரி 24, 1979 இல் பிறந்தார். அவர் மாத்தறை கம்புருபிட்டி மகா வித்தியாலயம் மற்றும் நாரந்தெனிய தேசிய பாடசாலையில் கல்வி பயின்றார்.

மதுஷின் தந்தை சமரசிங்க ஆராச்சிலாகே லட்சுமணன். தாய் மலானி சமரசிங்க. 88/89 காலப்பகுதியில் ஜேவிபியின் ஆயுத நடவடிக்கை மீளவும் தீவிரம் பெற்றபோது, மதுஷின் தாய் ஜேவிபியின் தீவிர உறுப்பினராக இருந்தார். அந்த நேரத்தில் ஜேவிபியின் உறுப்பினர்களை தேடித்தேடி பாதுகாப்பு படையினர் கொன்றனர். இதில் மதுஷின் தாயும் பலியானார். கம்புருபிட்டி பகுதியில் ஜே.வி.பி பேரணியில் கலந்துகொண்டிருந்தபோது, ​​ஜூலை 21, 1989 அன்று மதுஷின் தாயார் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அப்போது மதுஷ் பாடசாலையில் இருந்தார். தனது தாயின் திடீர் மரணத்தால் மதுஷ் மிகுந்த கோபத்திலும், துயரத்திலும் இருந்தார். மதுஷ் தனது மூத்த சகோதரி மற்றும் தம்பியுடன் அரவணைப்பில்லாத நிலைமைக்கு ஆளானார்.

காரணம், மதுஷின் தந்தை தனது குழந்தைகளை பராமரிப்பதில் அல்லது வளர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை. கம்புருபிட்டியின், கதாரேயில் வசித்து வந்த தனது பாட்டி மற்றும் அத்தையுடன் மதுஷ் தனது சகோதரி மற்றும் தம்பியுடன் வளர்ந்தார். மதுஷ் வகுப்பில் நன்றாக படிக்கக்கூடியவர் என பெயரெடுத்திருந்தார்.

குடும்ப நிலவரம் மதுஷை தொடர்ந்து கல்வி கற்க அனுமதிக்கவில்லை. அதனால்தான் க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்தாலும், கல்வியை பாதியில் விட்டார். அதன்பின்னர், பல்வேறு வேலைகளைச் செய்யத் தொடங்கினார்.

கம்புருபிட்டி பஸ் நிறுத்தத்திற்கு அருகில் செருப்பு தைப்பவராக முதல் வேலையை ஆரம்பித்தார். பின்னர், உழவு இயந்திரம் ஓட்டினார். அந்த வேலையிலிருந்து அவர் அதிகம் சம்பாதிக்கவில்லை. பின்னர் அதை விட்டுவிட்டு, சம்மாந்துரையில் நிஹால் மோட்டார்ஸில் சேர்ந்தார். சிறிதுகாலத்தில் அந்த வேலையையும் விட்டு, இரத்மலானையில் மணல் வியாபாரியொருவரின் லொறிச் சாரதியானார்.

பின்னர் பேருந்து ஓட்டுனரானார். கம்புருபிட்டி-மகந்துர வழித்தடத்தில் பேருந்து ஓட்டினார். இதன்போது, பேருந்தியில் பயணித்த விஜேதுங்க கமகே தயானி முத்துமலி என்ற யுவதியுடன் காதல் வசப்பட்டார். இருவரும் 1998 இல் திருமணம் செய்தனர்.

மனைவியுடன் கம்புருபிட்டியில் வசித்தபடி, பேருந்து ஓட்டிக் கொண்டிருந்தார். மதுஷின் பேருந்து நடத்துனராக கவுமா என்பவர், பின்னர் மதுஷின் பாதாள உலகக்குழுவில் இணைந்து செயற்பட்டார்.

சிறிது காலத்தின் பின் மதுஷ் மற்றும் அவரது மனைவி முத்துமலி கம்புருபிட்டி மருத்துவமனையில் சிற்றூழியர்களாக வேலையில் இணைந்தனர். மேல் மாகாணத்தை சேர்ந்த முக்கிய அரசியல்வாதியொருவரின் செல்வாக்கினால் இந்த வேலையை பெற்றனர்.

அந்த நேரத்தில் தெற்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவராக டேனி ஹித்தெத்தியேஜ் இருந்தார். அவர் முத்துமலியின் தொலைதூர உறவினராகவும் இருந்தார். மதுஷின் தந்தைக்கு சொந்தமான காணிகள் தொடர்பாக தெற்கு அபிவிருத்தி ஆணையத்தின் தலைவரான டேனி ஹிட்டிட்டுடன் நீண்டகாலமாக தகராறு ஏற்பட்டுள்ளது. அவர் காணிகளை அபகரித்ததாக கூறப்படுகிறது. இந்த சர்ச்சை கொலையில் முடிந்தது.

தனக்கு நிகழ்ந்த அநீதிக்கு எதிராக மதுஷ் கொலை செய்ய துணிந்தார். 2002ஆம் ஆண்டு நடந்த மோதலில் டேனி ஹித்தேதியேஜின் சகோதரர் உபநந்தவை மதுஷ் சுட்டுக் கொன்றார். இதுதான் மதுஷ் தனது குற்றவியல் பதிவு புத்தகத்தில் செய்த முதல் குற்றமாகும்.

உபநந்தவைக் கொன்ற பிறகு, மதுஷ் கிராமத்தை விட்டு வெளியேறி இரகசிய வாழ்க்கை வாழத் தொடங்கினார். இந்த தலைமறைவு வாழ்க்கை அவரை பாதாள உலகக்குழுவை நோக்கி கொண்டு சென்றது. ஒரு பாதாள உலகக்குழுவில் இணைந்து கப்பம், கொள்ளைகளில் ஈடுபட்டார். பொலிசாரிடம் சிக்காமல் பல பகுதிகளிலும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.

2005 ஆம் ஆண்டில், பேலியகொட குற்றப்பிரிவின் அப்போதைய ஓ.ஐ.சி.யான பிஞ்சரயந்த ஜெயகோடி, மதுஷ் உள்ளிட்ட கொள்ளையர்களைக் கைது செய்தார்.

ஆரம்பத்தில் கம்புருபிட்டிய மதுஷ் என அழைக்கப்பட்டவர், திருமணம் முடிந்து மனைவியுடன் மாக்கந்துரவிற்கு குடிபெயர்ந்த பின்னர் மாக்கந்துர மதுஷ் என அழைக்கப்பட்டார்.

பேலியகொட குற்றப்பிரிவினால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, நீர்கொழும்பு சிறையில் மதுஷ் அடைக்கப்பட்டார். டேனி ஹித்தேத்தியேஜ் தனது வாழ்க்கையை அழித்து தன்னை ஒரு கொலைகாரனாக மாற்றிவிட்டதாக மதுஷ் அவர் மீது வெறுப்பில் இருந்தார். இதனால் அவரை கொல்ல திட்டமிட்டார்.

நீர்கொழும்பு சிறையிலிருந்தபடியே, அந்த கொலையை நடத்தி முடித்தார் கொண்டதாகக் கூறினார். ஜூன் 11, 2006 அன்று, மகுந்துவவில் உள்ள வீட்டின் முன் மதுஷின் அடியாட்கள் அவரை சுட்டுக் கொன்றனர், இது முழு நாட்டையும் உலுக்கியது.

இதை தொடர்ந்து மகந்துர மதுஷ் கொலை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் கொள்ளை போன்ற குற்றவியல் பயணத்தை மேற்கொண்டார். 2006 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் திகதி ஒருவரை கொலை செய்தது, மாரவில பகுதியில் மற்றொருவரை சுட்டுக் கொன்றது, செப்டம்பர் 16, 2015 அன்று இந்திரஜித் ஜெயவர்தனவை மாத்தறை மருத்துவமனைக்கு முன்னால் சுட்டுக் கொன்றதாக மதுஷ் மீது குற்றம் சாட்டப்பட்டது.

துப்பாக்கிதாரிகளால் எத்தனை படுகொலைகள் செய்யப்பட்டன என்று சொல்ல முடியாது. மதுஷு உட்பட பாதாள உலக கும்பல் நடத்திய கொள்ளைகளின் எண்ணிக்கை மிகப்பெரியது. மாத்தறையில் ஒரு தொழிலதிபரிடமிருந்து ஒரு மில்லியன் ரூபாய் கொள்ளையடித்தது, நீர்கொழும்பு மற்றும் கம்பஹாவில் குத்தகை நிறுவனங்களின் கொள்ளை, கெசல்வத்தவில் உள்ள வயம்பா அபிவிருத்தி வங்கியின் கொள்ளை மற்றும் திஹகொடவில் ஒரு தொழிலதிபரிடமிருந்து ஒரு மில்லியன் ரூபாய் கொள்ளையடித்தது ஆகியவை மதுஷ் செய்த கொள்ளைகளில் சில.

நாளடைவில் ஏனைய பாதாள உலகக்குழுக்களையும் அடக்க தொடங்கிய மதுஷ், ஹெரோயின் கடத்தலின் கவனம் செலுத்த தொடங்கினார்.

அந்த நேரத்தில் ஆதிக்கம் செலுத்திய கொஸ்கொட சுஜியின் கும்பல், கோத அசங்கவின் கும்பல், கணேமுல்ல சஞ்சீவவின் கும்பல் மற்றும் பொடி சுரேஷின் கும்பல் ஆகியவற்றை அடக்கி, மதுஷ் தெற்கு பாதாள உலகக்குழுக்களின் கோட் பாதர் ஆகினார்.

அங்கொட லொக்கா, மாலிளிகாவட்த்தை காஞ்சிபானை இம்ரான், இரத்மலான ரோஹாவுடன் நெருங்கி செயற்பட்ட மதுஷ், அவர்களின் துணையுடன் பெரிய அளவிலான ஹெரோயின் கடத்தலை மேற்கொண்டார்.

இதற்கிடையில், பாதாள உலக கும்பல்கள் மற்றும் பாதுகாப்பு படையினரிடமிருந்து மதுஷிற்கு கடுமையான மரண அச்சுறுத்தல்கள் வந்தன. இதனால், மக்கந்துர மதுஷ் நாட்டை விட்டு வெளியேறி தனது போதைப்பொருள் வர்த்தகத்தை மேற்கொள்ள திட்டமிட்டார். விமான நிலையம் வழியாக இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது மதுஷை விமான நிலையத்தில் சிஐடியினர் கைது செய்தனர். சிஐடியின் காவலில் பல மாதங்களாக இருந்த மதுஷ், பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், மீண்டும் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டார்.

மதுஷின் இரண்டாவது முயற்சி வெற்றி பெற்றது. மதுஷ் முதலில் இந்தியாவுக்கு தப்பி, பின்னர் துபாய்க்கு சென்றார். அந்த நேரத்தில், டுபாயில் பல பெரிய அளவிலான ஹெரோயின் கடத்தல்காரர்கள் மதுஷுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தனர். அவர்கள் அனைவரும் மதுஷை கவனித்துக் கொண்டனர். அவர்களின் ஆதரவில், மதுஷ் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்.

நாட்டுக்குள் பெருமளவில் ஹெரோயிணை கடத்தியதுடன், பாதாள உலகக்குழுக்களை கட்டுப்படுத்த ஆரம்பித்தார். தன்னை எதிர்க்கும் எவரையும் இரண்டாவது சிந்தனை இல்லாமல் கொன்றார்.

அந்த நேரத்தில், துபாயில் தங்கியிருந்த காஞ்சிபானை இம்ரானின் மூலம், போதைப்பொருள் வலையமைப்பை விஸ்தரித்தார்.

போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பில்லியன் கணக்கான ரூபாயை செலவழித்த மதுஷ், துபாயில் ஆடம்பர வாழ்க்கை வாழத் தொடங்கினார். அந்த நேரத்தில், பாதாள உலகத் தலைவர் களு துஷார சிறைக் கலவரத்தில் சிக்கி காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மதுஷ், களு துஷாரவின் அழகான மனைவியை துபாய்க்கு அழைத்து வந்து தனது மனைவியாக மாற்றினார். மதுஷின் சட்டபூர்வமான மனைவியும் மாற்றுதிறனாளியான குழந்தையும் மகந்துரேவில் இருந்தனர்.

பின்னர், மாற்று திறனாளியாக தனது குழந்தைக்கு சிகிச்சையளிக்க தனது மனைவியை சிங்கப்பூர் அழைத்தார். மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்ற பிறகு, மதுஷ் தனது குழந்தையையும் மனைவியையும் துபாய்க்கு அழைத்து வந்தார். மதுஷ் தனது குழந்தையை மிகவும் நேசித்தார். குழந்தையைத் தத்தெடுப்பதாகக் கூறி, மதுஷ் தனது சட்டபூர்வமான மனைவியை இலங்கைக்கு வெறுங்கையுடன் அனுப்பினார்.

களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீதான தாக்குத மதுஷ் வழிநடத்தினார்.  சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ​​அவரது போட்டியாளரான பாதாள உலக தலைவர்களில் ஒருவரான ரனாலே சமயங் மீதான தாக்குதல் அது.  அங்கொட லொக்காவைப் பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ரணாலே சமயங் உட்பட 7 பேர் உயிர் இழந்தனர். மதுஷ் பாதாள உலக உறுப்பினர்களிற்கு மட்டுமல்ல, காவல்துறை அதிகாரிகளுக்கும் மரண அச்சுறுத்தல் விடுத்தார். போதைப்பொருள் பிரிவில் போலீஸ் இன்ஸ்பெக்டரான நியோமல் ரங்கஜீவ, மதுஷின் உதவியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த தாக்குதலில் வீதியில் பயணித்த ஒரு அப்பாவி சிறுமியும் கொல்லப்பட்டார்.

மகரகமவிலுள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரிடமிருந்து 800 மில்லியன் ரூபா  மதிப்புள்ள வைரத்தைக் கொள்ளையடித்தார்.

வைரத்தை டுபாய்க்கு கொண்டு செ்ல மதுஷ் பலவழிகளிலும் முயன்றாலும் பலனளிக்கவில்லை. இறுதியில், மதுஷின் குழுவை சேர்ந்த கவுமாவிடமிருந்து அந்த வைரம் மீட்கப்பட்டது.

மதுஷின் உத்தரவின் பேரில் கொஸ்மல்லியை கடத்திய பாதாள உலக உறுப்பினர்கள், அவரை அங்குனகோலபெலெசவுக்கு கொண்டு சென்று சுட்டுக் கொன்றனர். பின்னர், மதுஷின் உத்தரவின் பேரில், பாதாள உலக குண்டர்கள் கொஸ் மல்லியின் உடற்பகுதியில் இருந்து துண்டிக்கப்பட்ட தலையை நீதிமன்றமொன்றின் வளாகத்திற்கு கொண்டு வந்தனர். இந்த கொலை சமீபத்திய வரலாற்றில் மிகவும் கொடூரமான பாதாள உலக சம்பவமாகும்.

பாதாள உலகத்தை கட்டுப்படுத்தி, பெரிய அளவிலான ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டு, ஆடம்பரமான வாழ்க்கையை நடத்தி வந்த மதுஷ், இறுதியில் துபாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். மதுஷின் இரண்டாவது மனைவியின் குழந்தையின் பிறந்த தினத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில், மதுஷ் உட்பட அனைத்து கூட்டாளிகளையும் கைது செய்தனர். பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

சுமார் ஒன்றரை வருடங்கள் சி.ஐ.டியின் காவலில் மதுஷ் வைக்கப்பட்டிருந்தார்.

மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் ஹெரோயின் மீட்க மதுஷ் அழைத்துச் செல்லப்பட்ட போது, பாதாள உலகக்கும்பலை சேர்ந்த இருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தி மதுஷை மீட்டுச் செல்ல முயன்றதாகவும், அதன்போது மதுஷ் கொல்லப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

பின்னர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். இது என்கவுண்டர் என நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தின.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here