கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் மூலக்கூறு கண்டுபிடித்த இந்திய வம்சாவளி மாணவி: ரூ.18 லட்சம் பரிசு தொகை பெற்றார்

கொரோனா வைரஸின் முள் போன்ற புரோட்டீன் பகுதியைக் கட்டுப்படுத்தி செயலிழக்க செய்யும் மூலக்கூறு ஒன்றை கண்டுபிடித்து இளம் விஞ்ஞானி போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டீன் ஏஜ் இளம்பெண் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் ‘2020 3எம் இளம் விஞ்ஞானி’ போட்டி நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கள் கண்டுபிடிப்புகளை சமர்ப்பிக்கின்றனர். இந்த ஆண்டு நடந்த இளம் விஞ்ஞானி போட்டியிலும் ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்களில் டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த டீன் ஏஜ் இளம்பெண் அனிகா செப்ராலு (14) போட்டியில் வென்று 25 ஆயிரம் டொலர் பரிசு தொகை பெற்றுள்ளார்.

தற்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருதால், அதற்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிகா தனது ஆராய்ச்சியை சமர்ப்பித்துள்ளார்.

கொரோனா வைரஸின் மேல்பகுதியில் முள் போன்ற அமைப்பு காணப்படுகிறது. இது புரோட்டீனால் ஆனது. சோப்பு போட்டு கை கழுவும் போது, வைரஸின் மேல் பகுதியில் இருக்கும் முள் போன்ற இந்த புரோட்டீன் பகுதி சிதைந்து விடும். வைரஸின் மேல் பகுதியில் இருக்கும் முள் மூலம்தான் நமது உடலுக்குள் நுழைகிறது. பின்னர் பல்கி பெருகி தொற்று நோயாக மாறுகிறது.

இதைத் தடுக்க உலக நாடுகள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், இந்த முள் போன்ற புரோட்டீனுடன் பிணைந்து வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்கும் மூலக்கூறு ஒன்றைதான் 8ஆம் வகுப்பு மாணவியான அனிகா கண்டுபிடித்துள்ளார். இந்த மூலக்கூறு செலுத்தும் போது, வைரஸின் மேல் பகுதியில் உள்ள முள் போன்ற அந்த அமைப்புடன் பிணைந்து ஒன்றாகி விடும். அத்துடன் வைரஸின் புரோட்டீன் பகுதியை செயல்பட விடாமல் முடக்கி விடும்.

இதுகுறித்து அனிகா கூறும்போது, ‘‘போட்டியில் வென்றது உற்சாகமாக இருக்கிறது. இதை நான் தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய முயற்சிக்கிறேன்’’ என்றார். தற்போது, மருத்துவராகவும், மருத்துவ ஆராய்ச்சியாளராகவும் வரவேண்டும் என்பதுதான் அனிகாவின் லட்சியமாக இருக்கிறது.

கொரோனா வைரஸைத் தடுக்க சக்தி வாய்ந்த நேரடி தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கு பதில், வைரஸுடன் மூலக்கூறு எவ்வாறு, எங்கு பிணைக்கப்படும் என்பதை அடையாளம் காண பல கணினி நிரல்களைப் பயன்படுத்தி உள்ளார் அனிகா. இதற்கான மருந்துக்கு எந்த மூலக்கூறு சரியாக இருக்கும் என்பதை கண்டறிய, சிலிகா மெதடாலஜி முறையை அனிகா பயன்படுத்தி உள்ளார். இந்த மூலக்கூறு, வைரஸின் முள் போன்ற புரோட்டீன் பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து பிணைத்துக் கொள்ளும். இதன்மூலம் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இந்த மூலக்கூறு பெரிதும் உதவும் என்று கூறுகின்றனர்.

இந்த மூலக்கூறுகளை வைத்து பரிசோதனை செய்யப்பட்டதா என்ற விவரம் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here