மாவை- விக்னேஸ்வரன் சந்திப்பு: கஜேந்திரகுமாருடனும் சந்திப்பு!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரனும் நேற்று நேரில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.

நேற்று (18) மாலை நல்லூரிலுள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

இதன்போது சுமார் 30 நிமிடங்கள் வரை இருவரும் பேச்சு நடத்தியுள்ளனர்.

தமிழ் தேசிய கட்சிகளிற்குள் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சி நடந்து வரும் நிலையில், அந்த சந்திப்பில் இதுவரை க.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்ளவில்லை. இந்த கூட்டு முயற்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தும் இரகசிய நிகழ்ச்சி நிரலில் இயங்குகிறதோ என்ற சந்தேகம் விக்னேஸ்வரனிற்கு உள்ளது.

இந்த நிலையில், நேற்று விக்னேஸ்வரனை நேரில் சந்தித்து, அது குறித்து மாவை சேனாதிராசா விளக்கமளித்துள்ளார். அத்துடன், தலைவர்கள் மட்ட கலந்துரையாடலில் விக்னேஸ்வரன் கலந்து கொள்ள வேண்டியதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்த தரப்பிற்கும் பாதிப்பில்லாமல் அமைப்பு ரீதியாக எப்படி இணைந்து செயற்படுவதென்பது பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று முன்தினம் தமிழ் கட்சிகள் சந்தித்து கொண்டபோது, விக்னேஸ்வரன், கஜேந்திரகுமாரிற்கு சந்திப்பு குறித்து விளக்கமளிக்கப் போவதாக குறிப்பிட்டிருந்தார்.

இதன்படி, கஜேந்திரகுமாரையும் மாவை சேனாதிராசா நேரில் சந்திக்கவுள்ளார். அனேகமாக நாளை மறுநாள் கொழும்பில் அந்த சந்திப்பு நடக்கலாமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தமிழ் பக்கத்திடம் தெரிவித்தார்.

தமது கட்சி எந்த முன் முடிவையும் இதுவரை கொண்டிருக்கவில்லையென்றும், மாவை சேனாதிராசாவுடனான சந்திப்பின் பின்னர், கூட்டு முயற்சி தொடர்பில் இறுதியான நிலைப்பாட்டை எடுப்போம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here