மனித தோலில் 9 மணித்தியாலம் உயிர்வாழும் கொரோனா வைரஸ்; 15 செக்கனில் கொல்லும் அல்கஹோல்: புதிய ஆய்வு முடிவு!

கொரோனா வைரஸ் மனித தோலின் மேற்பரப்பில் சுமார் ஒன்பது மணி நேரம் உயிர்வாழும், இது இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் மனித தோலின் மேற்பரப்பில் வாழும் காலத்தை விட ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும் என்று ஜப்பானில் ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.

கியோட்டோ ப்ரிபெக்சுரல் மெடிசின் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தொற்றுநோயியல் நிபுணர் ரியோஹெய் ஹிரோஸ் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளனர்.

அல்கஹோல் கலந்த கிருமிநாசினிகள் அல்லது செறிவு கூடிய எதனோல் கொரோனா வைரஸை 15 விநாடிகளிற்குள் செயலிழக்க வைப்பதாகவும் கண்டறிந்துள்ளனர்.

இதனால், கைகளை நன்கு கழுவுவது அல்லது அல்கஹோல் சார்ந்த கிருமிநாசினியைப் பயன்படுத்தி கைகழுவுவது கொரோனா தொற்றை தடுக்க நல்ல வழியென்றும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆராய்ச்சி முடிவுகள் அமெரிக்காவை தளமாக கொண்ட “Clinical Infectious Diseases“ என்ற அறிவியல் இதழின் ஒக்ரோபர் 3ஆம் திகதிய இணையப்பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா ஏ ஆகிவற்றை தோலின் மேற்பரப்பில் சோதனையிட்ட போது, கொரொனா வைரஸ் 9 மணித்தியாலம் உயிரோடு காணப்பட்டது. ஆனால் இன்ஃப்ளூயன்ஸா ஏ ஒரு மணித்தியாலத்திற்கு சற்று அதிக நேரமே உயிர் வாழ்ந்தது.

இரும்பு, வெப்ப-எதிர்ப்பு கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றின் மேற்பரப்புக்களில் கொரோனா வைரஸ் 58 முதல் 85 மணி நேரம் வரை செயலில் இருந்தது கண்டறியப்பட்டது. அதே நேரத்தில் இன்ஃப்ளூயன்ஸா ஆறு முதல் 11 மணி நேரம் வரை நீடித்தது. எல்லா சந்தர்ப்பங்களிலும், கொரோனா வைரஸ் மிக நீண்ட காலம் தப்பிப்பிழைத்து உயிர்வாழ்ந்தது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், அல்கயோல் அடிப்படையிலான கிருமிநாசினி, எத்தனோல் ஆகியவற்றின் செயல்திறனைப் பற்றியும் குழு ஆய்வு செய்தது. விற்பனைக்கு கிடைக்கக்கூடிய அல்கஹோல் அடிப்படையிலான கிருமிநாசினிகளைப் போலவே, 80% செறிவில் எத்தனோலையும் ஆய்விற்குட்படுத்தினர்.

இவை இரண்டும், கொரோனா வைரஸ் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் இரண்டையும் 15 விநாடிகளுக்குள் முற்றிலும் செயலிழக்கச் செய்தது.

ஆராய்ச்சியாளர் ஹிரோஸ் “புதிய கொரோனா வைரஸ் மனித தோலில் ஒப்பீட்டளவில் நீண்ட காலம் உயிர்வாழக்கூடியது என்று தோன்றுகிறது. இது தொற்று வழிகளை உறுதிப்படுத்துவதை கடினமாக்கும் பின்னணி காரணிகளில் ஒன்றாகும். ஒன்பது மணி நேரம் செயலில் இருந்தால், தொற்றுநோய்களைத் தடுப்பது கடினம். தனிப்பட்ட முயற்சிகளினால் மட்டும அதை கட்டுப்படுத்தலாம். எனவே பாதிக்கப்பட்டவர்களைக் குறை கூறாதது முக்கியம்.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here