2 வருடமாகியும் எமது கட்சி இன்னும் விரிவாக்கமடையவில்லை; ஒற்றுமை முயற்சியில் கூட்டமைப்பு மட்டும் பலமடையாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: விக்னேஸ்வரன்!

எமது கட்சி ஆரம்பித்து 2வருடங்களாகிறது. ஆனால் யாப்பில் குறிப்பிட்டபடி கட்சி கட்டமைக்கப்படவில்லை. செயற்பாடுகள் விரிவாக்கப்படவில்லை. ஒரு கட்சியாக இன்னும் வடக்கு கிழக்கில் வியாபிக்கவில்லையென்பதுதான் உண்மை என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன்.

இன்று (18) யாழ்ப்பாணம்- திருநெல்வேலியில் கட்சியின் மக்கள் தொடர்பகம் திறந்து வைத்து உரையாற்றியபோது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத்தியகுழுவில் மாற்றங்கள் செய்ய பேராசிரியர் சிவநாதன் தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளேன். எமது கட்சி ஆரம்பித்து 2வருடங்களாகிறது. ஆனால் யாப்பில் குறிப்பிட்டபடி கட்சி கட்டமைக்கப்படவில்லை. செயற்பாடுகள் விரிவாக்கப்படவில்லை. ஒரு கட்சியாக இன்னும் வடக்கு கிழக்கில் வியாபிக்கவில்லையென்பதுதான் உண்மை.

ஆனால் வெளிப்பார்வைக்கு தமிழ் தேசிய அரசியலில் ஒரு முக்கியமான கட்சி நாம் என்ற தோற்றம் காணப்படுகிறது. அதற்கு காரணம் ஊடகங்களின் ஆதரவு எமக்கு இருப்பதுதான் காரணமென நம்புகிறேன். ஆகவே யாப்பில் குறிப்பிட்டபடி எமது கட்சியை கூடிய விரைவில் வலுப்படுத்த வேண்டும். ஆகக்குறைந்தது எல்லா மாவட்டரீதியிலான அணிகளை உருவாக்கி, உறுப்பினர்களை சேர்த்து, அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பது பற்றி உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்.

கட்சியின் செயற்பாடுகள் என்னை மட்டும் மையப்படுத்தியதாக இருந்து விடக்கூடாது. தேர்தல் காலத்தில் செயற்பட்டதைபோல ஒவ்வொருவரும் தீவிர செயற்பாட்டில் இறங்க வேண்டும்.

தமிழ் தேசிய அரங்கில் செயற்படும் அரசியல் கட்சிகள் காலத்தின் தேவை கருதி ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென வலியுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் நாம் அவதானமாக செயற்பட வேண்டும். இன்று நாமிருக்கும் ஆபத்தான அரசியல் சூழலில் ஒன்றுபடுவதுதான் அவசியமென்றால், நாம் அதற்கேற்றவாறுதான் செயற்பட வேண்டும். அதேவேளை, இத்தகைய ஒன்றிணைவு தமிழ் தேசிய கூட்டமைப்பை மட்டும் வலுப்படுத்துவதாக மட்டும் அமைந்து விடுமோ என்றும் நாம் சிந்திக்காமல் இருந்து விட முடியாது.

எது எப்படியோ, இந்தியாவை கையாள்வது, 20வது திருத்தம், காணி அபகரிப்பு போன்ற பல விடயங்களில் நாம் ஏனைய கட்சிகளுடன் ஒத்துழைத்து செயற்படுவது அவசியமென்பதே எனது கருத்து.

காணி அபகரிப்பு தொடர்பாக ஒரு கலந்துரையாடலை முல்லைத்தீவில் நடத்துவது பற்றி நான் திட்டமிட்டேன். ஆனால் கொரோனாவை காரணம் காட்டி அரசாங்கம் தடை போடலாம், கொரோனாவால் மக்கள் கூட பின்நிற்பார்கள் என பலரும் சந்தேகம் தெரிவித்தார்கள்.

சூம் மூலமாக கருத்தரங்கத்தை யாழ்ப்பாணத்தில் நடத்துவது பற்றியும் யோசிக்கிறேன். விரைவில் அது பற்றி அறிவிப்பேன். எமது காணிகள் வேகமாக ஆக்கிரமிக்கப்படுகிறது. அதிகார பீடத்தின் ஆசியுடன் மண் அகழ்வு, மரம் வெட்டல், வளசூறையாடல்கள் நடக்கிறது. வடக்கிலும், கிழக்கிலும் இது நடக்கிறது. இதை தடுக்க மக்களிற்கு போதிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும்.

நாம் வழக்குகளும் பதிய வேண்டும். நாம் தோற்றாலும் அவற்றின் தீர்ப்புக்கள், தீர்மானங்கள் இங்குள்ள நிலைமையை சர்வதேசத்திற்கு எடுத்துக் காட்டும். வடக்கு கிழக்கு காணிகளை வெளிமாவட்ட சிங்களவர்களிற்கு பகிர்ந்தளிப்பதை எப்படியாவது தடுக்க வேண்டும்.

அரச காணிகளில் இராணுவத்தினர் இருக்கலாமென கூறினால், எதிர்காலத்தில் அவர்களின் குடும்பங்களையும் இங்கு இருத்தி, அவர்களிற்கு வாக்கு வழங்குவார்கள். இதற்காக ஒரு சட்டத்தரணிகள் குழுவை அமைத்துள்ளோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here