ஆயிரம் ரூபா சம்பளத்தை நிச்சயமாக பெற்றுக்கொடுப்பேன்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை நிச்சயமாக பெற்றுக்கொடுப்பேன். ஆயிரம் ரூபா சம்பளம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மௌனம் காப்பதாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர்.நாம் மௌனம் காக்கவில்லை. நிச்சயமாக ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பேன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட பூண்டுலோயா ஹெரோ தோட்ட வீதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஆயிரம் ரூபா சம்பளம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மௌனம் காப்பதாக சிலர் கூறுகின்றனர். உண்மை அதுவல்ல. நாங்கள் ஆட்சிக்கு வந்தது மக்களுக்கு சேவை செய்வதற்கே. ஊடகங்களில் உலருவதற்கில்லை. அமைச்சர் நிமால் சிறிபால இரண்டு வாரங்களில் பெருந்தோட்ட கம்பனிகளை ஒரு தீர்மானத்து வந்து தீர்வை வழங்குமாறு கேட்டிருக்கின்றார். நான் உங்களிடம் உண்மையை பேசுகின்றேன். நான் உங்களிடம் உண்மையை கூறுவதாலேயே எனக்கு ஒரு இலட்சத்துக்கு அதிகமான வாக்குகளை வழங்கினீர்கள்.

கொரோனோ இலங்கையை மீண்டும் தாக்கும் என யாரும் நினைக்கவில்லை. கொரோனா வைரஸ் தாக்கத்தால் தனிப்பட்ட ரீதியில் நாம் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். நிச்சயமாக ஆயிரம் ரூபா கிடைக்கும். நாட்டின் சூழ்நிலையையும் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

கடந்த அரசாங்கத்தின்போது மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தான் எதிர்கட்சியில் இருந்துக்கொண்டு ஆளுங் கட்சிக்கு ஆதரவு வழங்குவேன் என்றார். ஆதரவு என்றால் ஆளுங் கட்சியுடன் இணைந்து அல்ல. எமது மக்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதாயின் அதற்கு ஆதரவு வழங்குவேன் என்றார். ஆனால் இன்று எதிர்கட்சியிலே இருப்பவர்கள் மக்களை பற்றி எண்ணாது எம்மிடம் கேள்விகளை மாத்திரம் தொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். இன்று நாங்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு ஆதரவு கேட்கவில்லை. நாங்கள் கூட்டணி அமைக்கவும் கேட்கவில்லை. மக்களுக்குதானே ஆதரவு கேட்கின்றோம்.

அனைத்து தொழிச்சங்கங்களும் ஒற்றுமையாக இருந்தால்தானே எதனையும் சாதிக்க முடியும். ஒற்றுமைதான் எமது பலம். இன்று எம்மீது சிலருக்கு பயம் ஏற்பட்டுள்ளது. காரணம் அவர்களுக்கு எனது பலம் தெரிந்துள்ளது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்பது தெரிகிறது. நான் மலையகத்தை மாற்றி காண்பிப்பேன். அந்த நம்பிக்கை என்னிடம் இருக்கின்றது. அந்த நம்பிக்கையை மக்கள் எனக்கு தந்துள்ளார்கள்.

பொன்னாடை மற்றும் மலர்மாலை அணிவிக்கும் கலாச்சாரத்தையும் நிறுத்துங்கள். அரசியல்வாதிகளுக்காக செலவிடும் அந்த பணத்தை உங்கள் பிள்ளைகளின் கல்வி தேவைக்கு பயன்படுத்துங்கள். பொன்னாடை போர்த்தி, மலர்மாலை அணிவிக்கவில்லை என்பதற்காக நாம் உங்களிடம் கோபமடையப் போவதில்லை. எனக்கு மாலையோ, பொன்னாடையோ போர்த்த வேண்டாம்.

பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள வீதிகளை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துறைசார் அமைச்சருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தோட்டப் பகுதிகளில் 384 கிலோமீற்றர் அளவு புனரமைக்கப்படாமல் உள்ளது. எனவே, அடுத்த ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் தோட்டப்பகுதிகளில் உள்ள அனைத்து வீதிகளும் புனரமைக்கப்படும் என அமைச்சர் ஜோண்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் கிராமிய வீதி உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா ஆகியோர் எம்மிடம் உறுதியளித்துள்ளனர்.

மலையகத்தில்தான் வீட்டுப்பிரச்சினை இருக்கின்றது. எமது மக்களுக்கு இன்னும் நில உரிமை இல்லை. அந்த உரிமையை வழங்கினால் வெளிநாடுகளில் உள்ள இளைஞர்கள் வீடுகளை கட்டிக்கொள்வார்கள். இந்தியாவின் 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்படும். 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் வீடுகளை கட்ட முடிந்தால் மீதமுள்ள 2 லட்சம் பேருக்கு என்ன செய்வது, எனவே, எமது மக்களுக்கு காணி உரிமை வழங்கினால் வெளிநாடுகளில் உள்ளவர்களாவது வீடுகளை நிர்மாணிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here