சமத்துவக் கட்சி பதிவு செய்யப்பட்ட அரசியற் கட்சியாக அங்கீகாரம்: முருகேசு சந்திரகுமார்

சமத்துவக் கட்சி, கேடயம் சின்னத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியற்
கட்சியாக இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதனை பொது மக்களு்க்கு அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் என சமத்துவ கட்சியின் பொதுச் செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திகுமார் தெரிவித்துள்ளார்.

கட்சியின் பதிவு தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்திக்குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பதிவு செய்வதற்கென விண்ணப்பித்த 154 அரசியற் கட்சிகளில் ஆறு கட்சிகள்
மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி எனது தலைமையில் சமத்துவக்
கட்சியானது தொடர்ந்தும் தமிழ்மொழிச் சமூகத்தினரின் மத்தியில் மக்களின்
அரசியல் உரிமைக்கும் வாழ்க்கைச் சவால்களுக்குமான தீர்வினை நோக்கிச்
செயற்படும். கட்சியின் கோட்பாடான பன்மைத்துவம், பல்லின சமத்துவம், சமூக
நீதி, ஜனநாயகச் செழுமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு மக்கள் பேரியக்கமாக கட்சியின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அவர் விடுத்துள்ள
செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சமத்துவக் கட்சியானது மக்கள் மத்தியில் தன்னுடைய அரசியல்
செயற்பாடுகளை முன்னெடுத்து மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளது. அரசியற் கட்சியாக
பதிவுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் இடையில் வந்த தேர்தல்களில்
சுயேச்சைக்குழுவாக கேடயம் சின்னத்தில் போட்டியிட்டு பிரதேச சபை
உறுப்பினர்கள், நகர சபை உறுப்பினர்களை வெற்றி கொண்டிருக்கிறது. கடந்த
பாராளுமன்றத் தேர்தலிலும் சுயேச்சைக் குழுவாகவே கேடயம் சின்னத்தில்
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தது. எதிர்காலத்தில்
வடக்குக் கிழக்கில் பதிவு செய்யப்பட்ட அரசியற் கட்சியாக தேர்தல்களில்
போட்டிடுவதோடு, தமிழ்ச் சமூகத்தின் அரசியல் விடுதலை, வாழ்க்கைப்
பிரச்சினைகள், சமூக முன்னேற்றம், பிரதேச அபிவிருத்தி ஆகியவற்றுக்காக
புதிய அணுகுமுறையில் செயற்படவுள்ளது.

இன்றைய உலகச் சூழலுக்கும் நாட்டின் யதார்த்த நிலவரத்திற்கும் ஏற்ப புதிய
அரசியல் கோட்பாடு, புதிய உபாயங்கள், புதிய செயல்முறை என்பவற்றை
உள்ளடக்கமாகக் கொண்டு சமத்துவக் கட்சியின் செயற்பாடுகள் அமையும். மக்கள்
பங்கேற்பு அரசியலின் வழியாக மக்கள் கட்சியாக சமத்துவக் கட்சி
வளர்த்தெடுக்கப்படும். அவ்வாறான ஒரு அரசியல் செயற்பாட்டின் வழியாகவும்
முன்னெடுப்பின் வழியாகவுமே மக்களுடைய அரசியல் உரிமைகளும் நலன்களும்
சாத்தியமாகும் என சமத்துவக் கட்சி தீர்க்கமாக நம்புகிறது எனவும் அவர்
தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here