சுறாக்கள் எழுப்பும் துக்கப் பாடல்கள்

மழைக் காடுகளில் வாழும் அரிய இனமான ஓராங்குட்டான், எந்தப் பழம் சாப்பிடத் தகுந்தது, எது தகாதது என்று தனது குட்டிகளுக்குப் போதிப்பதற்கு பத்தாண்டுகள் தேவை. அந்தக் கல்வியின் மூலமாகவும் அந்தக் குட்டிகள் உண்டு, கழித்துச் செழித்திருப்பதன் வாயிலாகவுமே மழைக் காடுகளில் 700 விதமான தாவரங்கள் பெருகும் சூழல் உண்டாகும். ஆனால், இந்த மழைக் காடுகளின் பாதிப் பகுதியைத் தன் வாழ்நாளிலேயே உலகம் இழந்துவிட்டதாக வருத்தத்தோடு குறிப்பிடுகிறார் புகழ்பெற்ற உயிரியலாளரும் தொலைக்காட்சிப் பிரபலமும் சூழலியல் பாதுகாவலருமான சர் டேவிட் அட்டன்பரோ.

சமீபத்தில் தான் 94 வயதை நிறைவுசெய்த டேவிட் அட்டன்பரோ, மனிதர்களின் காலடி படாத இடங்களுக்குப் பயணித்து, நிலத்திலும் கடலிலும் தொலைதூரப் பிரதேசங்கள் வரை உலக மக்களுக்குப் படம்பிடித்துக் காட்டியவர். அவரது சமீபத்திய ‘டேவிட் அட்டன்பரோ: அ லைஃப் ஆன் அவர் பிளானட்’ ஆவணப்படத்தைத் தனது வாழ்வனுபவங்களின் சாட்சியாக நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார். இது நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கிறது.

செர்னோபில் அணு உலை விபத்தால் பாதிக்கப்பட்டு 48 மணி நேரத்தில் காலி செய்யப்பட்ட உக்ரைன் நாட்டில் உள்ள காலியான அடுக்குமாடிக் குடியிருப்பில் நின்றுகொண்டு, மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட மாபெரும் பேரிடரிலிருந்து தனது சாட்சியத்தைத் தொடங்குகிறார். இதுபோன்ற அணு உலை விபத்து எப்படி மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பேரிடரோ அதற்கும் அதிகமான விளைவை மனிதர்கள் இயற்கை உலகுக்கு கடந்த நூறு ஆண்டுகளில் உருவாக்கியிருக்கிறார்கள் என்று தனது அழுத்தமும் நேசமும் வாய்ந்த குரலுடன் சொல்லத் தொடங்குகிறார்.

நிலத்திலும் நீரிலும் வாழும், பெரிதும் பிரமாண்டமுமான ஜீவராசிகளின் தாவரங்களின் உயிர் வாழ்க்கை இந்தப் பூமி, சமநிலையுடன் இருக்க எத்தனை அவசியம் என்பது நம் முன்னர் காட்சிகளாகக் காண்பிக்கப்படுகின்றன.

மனிதனை மையமாகக் கொண்ட தொழில் வளர்ச்சி, நாகரிகம், பெருநுகர்வின் விளைவால் இந்த உலகில் உயிர்கள் அருகிப்போகும் ஆறாவது அழிவுக்கு (mass extinction) மனிதர்கள் காரணமாக இருக்கப்போகிறார்கள் என்று எச்சரிக்கிறார் அட்டன்பரோ. இதற்கு முன்னரான ஐந்தாவது அழிவில்தான் டைனோசர் போன்ற பேருயிர்கள் இழந்தன. ஆனால், உலகத்தின் உயிர்வாழ்க்கையின் தலையெழுத்தை மாற்றி பேரளவு உயிர்களை அருகிப் போகச் செய்த அழிவுகள் இயற்கையாக உண்டாக்கியது.

ஆனால், ஆறாவது அழிவோ மனிதர்களின் பேராசையால், அலட்சியத்தால் உருவாக்கப்படுவது என்று எச்சரிக்கிறார் அட்டன்பரோ. பருவநிலை மாறுதல்கள் நிஜம்தான் என்று கூறும் அட்டன்பரோ, துருவப் பிரதேசங்களில் கோடைக் காலத்தில் கூட, சென்று சேரவே முடியாத தீவுகளுக்கு இப்போது படகுகளில் செல்ல முடிகிறது என்ற உண்மையைக் காட்சிகளாகவே நமக்கு முன் காட்டுகிறார்.

1980-கள் வரை காட்டெருமைகளும் மான்களும் புலிகளும் சிறுத்தைகளும் வாழ்வதற்குப் போதுமான அளவு நிலம் இருந்ததை தனது தொலைக்காட்சிப் பட அனுபவங்கள் வழியாகக் கூறும் அவர், விவசாயத்துக்கான நிலங்கள் விரிவாக்கப்பட்டதன் வாயிலாக அவற்றின் சுதந்திர நகர்வும் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு எண்ணிக்கையும் அருகிவருவதைக் குறிப்பிடுகிறார். பனை எண்ணெய்க்கான பனைத் தோப்புகளின் பெருக்கத்தால் ஓராங்குட்டானின் தொகை பெருமளவு குறைந்துபோனதைக் குறிப்பிடுகிறார்.

சுறா, திமிங்கிலம் போன்றவற்றை ஒட்டுமொத்தமாகப் பிடிப்பதற்கான இயந்திர வலைகளும் படகுகளும் துல்லியத் தொழில்நுட்பங்களும் சேர்ந்து சமுத்திரங்களில் உள்ள பெரிய உயிர்களில் 90%-ஐ அழித்துவிட்டது காண்பிக்கப்படுகிறது. சுறாக்கள் கடலுக்குள் விதவிதமாகப் பாடும் பாடல்களை டேவிட் அட்டன்பரோ தனது ஒலிப்பதிவுக் கருவியில் பதிவு செய்து நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். சுறாக்கள் சேர்ந்து ஒரு துக்கப் பாடலைப் பாடுவது போன்றுள்ளது.

பெரிய மீன்கள் கடலில் இல்லாமல் போனதைத் தொடர்ந்து, தனது பயணங்களில் அழகிய வண்ணங்களுடன் பார்த்த பவளப்பாறைகள் வண்ணங்களை இழந்து வெள்ளையாக எலும்புக் கூடுகளைப் போல ஆகிவிட்டதைக் கூறிவிட்டு, சமுத்திரம் இறக்கத் தொடங்கிவிட்டதன் சாட்சி அந்த வெள்ளைப் பவளப் பாறைகள் என்று குறிப்பிடுகிறார்.

உலகின் பேருயிர்களில் ஒன்றான கடற்பசுக்கள், தனது இயல்பான இருப்பிடமான கடல்பனித்தட்டு வடக்கை நோக்கி நகர்ந்ததால் இடப்பற்றாக்குறையால் ஒரு கடற்கரையில் கூடி, பாறைக் குன்றுகளிலிருந்து சரிந்து விழுவதைப் பார்க்கும்போது கண்ணீர் கசியாமல் இருக்க முடியாது.

கடந்த 90 ஆண்டுகளில் மக்கள்தொகையின் வளர்ச்சியும், மனிதர்கள் வளிமண்டலத்தில் உருவாக்கிய கரிம அடித்தடத்தின் தாக்கமும் குறிப்பிட்ட காலகட்ட இடைவெளியில் எண்களாக நம்முன் காண்பிக்கப்படுகின்றன. ஊட்டச்சத்து, பிறப்பு விகிதத்தின் வளர்ச்சி, ஆரோக்கியம், நீண்ட ஆயுள் என மனித குலம் எட்டிய சாதனைகளைக் குறிப்பிடும் அட்டன்பரோ, அது பூமியின் உயிர் வாழ்க்கை மீது ஏற்படுத்திய தாக்கத்தையும் குறிப்பிடுகிறார். பூமியில் தற்போது இருக்கும் விலங்குகள், பறவைகளில் 80% மனிதர்களின் உணவுக்காக வளர்க்கப்படுபவை என்கிறார். ‘அ லைஃப் ஆன் அவர் ப்ளானட்’ ஆவணப்படத்தை விரக்தியுடனோ அவநம்பிக்கையுடனோ அட்டன்பரோ முடிக்கவில்லை. அத்தனை அழிவுக்குப் பின்னரும் இயற்கைக்கு உள்ள புதுப்பிக்கும் தன்மையையும் நமக்கு அட்டன்பரோ உணர்த்துகிறார்.

பெட்ரோல், டீசல் போன்ற புதுப்பிக்க முடியாத ஆற்றல்களையும் அதிகம் கரியமில வாயுக்களை வெளியிடும் எரிபொருட்களையும் பயன்படுத்துவதைத் தவிர்த்து சூரிய, நீர் ஆற்றல்களைப் பயன்படுத்தி மொராக்கோ நாடு தனது சுற்றுச்சூழலின் மேல் நேர்மறையான தாக்கத்தைச் செலுத்தியுள்ளதை அட்டன்பரோ காட்டுகிறார். குறிப்பிட்ட கால அளவுக்குக் கடல் பகுதிகளில் மீன்பிடித்தலைத் தடைசெய்வதால் மீண்டும் அங்கே மீன்வளம் பெருகும், தாவர வளம் பெருகும் நிகழ்வுகளை உதாரணமாகக் காட்டுகிறார். ‘ரீவயரிங்’ என்பதைப் போல இந்த உலகைத் திரும்ப ‘ரீவைல்டிங்’ செய்ய வேண்டும் என்கிறார். உலகில் உள்ள ஒட்டுமொத்த உயிர்களுக்கும் இல்லாத ஒரு சக்தி மனித உயிருக்கு உண்டு என்று கூறும் அட்டன்பரோ, அது கற்பனா சக்தியே என்கிறார். அதன்வழியாக இந்த பூமியை மறுபடியும் எல்லா உயிர்களும் சமநிலையோடு வாழ்வதற்கானதாக மாற்ற முடியும் என்றும் நம்பிக்கையோடு முடிக்கிறார்.

அட்டன்பரோவின் ஆவணப்படத்தின் நடுவில் ஓராங்குட்டான் குட்டி ஒன்று அழிக்கப்பட்ட மழைக் காட்டில் தனது இடமென்று நினைத்து ஒரு கிளை மேல் அமர்ந்து தனது உறவினர்களையும் சுற்றிக் காணாமல் போன மரங்களையும் தேடுகிறது. அதன் கண்கள் பார்க்கின்றன. புலிகள் நம்மைத் திரும்பிப் பார்த்துவிட்டுப் போகின்றன. படைப்பு தன் உச்சபட்ச ஓவியத் திறனை வெளிப்படுத்தும் சிறு தவளைகள் நம்மைக் கண்ணுக்கு நேராகப் பார்க்கின்றன. நம்மால் அவற்றின் கண்களை நேரடியாக எதிர்கொள்ள முடியுமா என்ற குற்றவுணர்வு எழுகிறது. இதுதான் அட்டன்பரோ நம்மிடம் ஏற்படுத்தும் தாக்கம்.

– ஷங்கர்ராமசுப்ரமணியன்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here