யுனிவேர்சல் பாஸின் வருகையுடன் பஞ்சாப் புத்துணர்ச்சி: கோலி காலி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது. யுனிவெர்சல் பாஸ் கெயிலின் மீள் வருகையுடன் பஞ்சாப் அசுர வெற்றி பெற்றுள்ளது.

துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 31வது ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.

ரொஸ் வென்ற பெங்களூரு அணியின் கப்டன் விராட் கோலி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். முதலில் ஆடிய பெங்களூரு அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை சேர்த்தது. பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக விராட் கோலி 48 (39) ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக சமி மற்றும் எம்.அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணியின் தொடக்க ஜோடி கே.எல். ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் அதிரடியில் மிரட்டினர். மயங்க் அகர்வால் 45(25) ரன்களில் போல்ட் ஆனார்.

அடுத்ததாக களமிறங்கிய கிறிஸ் கெயில், கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய கே.எல்.ராகுல் 37 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் சிக்சர்களாக விளாசிய அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் 36 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார்.

தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி, அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது. முடிவில் வெற்றிபெற 1 ரன் தேவைப்பட்டநிலையில் கெயில் 53(45) ரன்களில் ரன்-அவுட் ஆனார்.

இதனால் சிறிய பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் நிகோலஸ் பூரான் இறுதிப்பந்தில் சிக்சர் அடித்தார்.

இறுதியில் கே.எல்.ராகுல் 61(49) ரன்களும், நிகோலஸ் பூரன் 6(1) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

முடிவில் பஞ்சாப் அணி 20 ஒவர்களில் 2 விக்கெட்டை இழந்து 177 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக சாஹல் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here