பிரேத குளிர்சாதனப் பெட்டியில் அண்ணனை உயிரோடு வைத்த தம்பி மீது வழக்கு

சேலத்தில் உயிரோடு இருந்த அண்ணனை பிரேத குளிர்சாதனப் பெட்டியில் விடிய விடிய அடைத்து வைத்த சகோதரர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சேலம் கந்தம்பட்டி பழைய வீட்டு வசதி வாரிய பகுதியில் வசிப்பவர் சரவணன் (70). இவரது அண்ணன் பாலசுப்பிரமணிய குமார் (74). இவர்களுடன் இவர்களின் தங்கை மகள்கள் ஜெயா (30), கீதா (48) ஆகியோர் வசித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாலசுப்பிரமணிய குமாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உடல்நிலை முன்னேற்றம் அடையாததால், அவரை சரவணன் வீட்டுக்கு அழைத்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 12ஆம் திகதி பாலசுப்பிரமணியகுமார் இறந்து விட்டதாக நினைத்து, பிரேத குளிர்சாதனப் பெட்டி நிறுவனத்துக்கு தகவல் கொடுத்து பெட்டியை பெற்றுள்ளார். நேற்று முன்தினம் மாலை குளிர்சாதன பெட்டியை பணியாளர்கள் திரும்ப எடுக்க வந்தபோது, குளிர்சாதனப் பெட்டிக்குள் முதியவர் உயிரோடு துடித்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த சூரமங்கலம் போலீஸார் பாலசுப்பிரமணிய குமாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரவணன் மீது அஜாக்கிரதையாகவும், முரட்டுத்தனமாகவும் இயந்திரத்தை பயன்படுத்தியது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here