ஹாத்ரஸ் பெண்ணின் குடும்பத்தாருக்கு 3 அடுக்கு பாதுகாப்பு: 12 மின்விளக்கு, 8 சிசிடிவி கேமிரா: உச்ச நீதிமன்றத்தில் உ.பி.அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்

உத்தரப்பிரதேசம்,ஹாத்ரஸ் மாவட்டத்தில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயதுப் பெண்ணின் குடும்பத்தாருக்கும், சாட்சியங்களுக்கும் 3 அடுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் உத்தரப்பிரதேச அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது தலித் பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடந்த மாதம் 14-ம் தேதி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்தப் பெண் சிகிச்சைக்காக டெல்லி சப்தார் ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, அந்தப் பெண்ணின் உடலை வலுக்கட்டாயமாக ஹாத்ரஸுக்கு இரவோடு இரவாகக் கொண்டுவந்த போலீஸார் தகனம் செய்தனர். வலுக்கட்டாயமாக பெண்ணின் உடலைத் தகனம் செய்ய போலீஸார் நிர்பந்தித்தினர் என்று பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். ஆனால், பெண்ணின் குடும்பத்தினர் விருப்பத்துடனே தகனம் செய்யப்பட்டது என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த வழக்கை சிபிஐ மூலம் விசாரி்க்க உத்தரவிட வேண்டும், சாட்சியங்களையும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் பாதுகாக்க என்ன நடவடிக்கையை உ.பி அரசு எடுத்துள்ளது எனக் கோரி என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

உ.பி. அரசும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்து. இந்த வழக்கை சிபிஐ அமைப்பும் விசாரணைக்கு ஏற்று விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் உத்தரப்பிரதேச அரசு சார்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்து. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்த வழக்கில் விசாரணை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடப்பதற்காக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் மற்றும் சாட்சியங்களுக்கு தேவையான முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பதால், சிபிஐ விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேரடிக் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் தங்கியிருக்கும் ஹாத்ரஸ் மாவட்டத்தின் சந்த்பா கிராமத்தில் போதுமான அளவு போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய 15 போலீஸார் 24 மணிநேரமும் அந்தவீட்டுக்கு வெளியேயும், அருகேயும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வீ்ட்டைச் சுற்றி 8 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும், சாட்சியங்களுக்கும் முழுமையான பாதுகாப்பு அளிக்க உ.பி. அரசு உறுதிபூண்டுள்ளது. கொல்லப்பட்ட பெண்ணி பெற்றோர், 2 சகோதரர்கள், அண்ணி, பாட்டி ஆகியோருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

2 காவல் ஆய்வாளர்கள், 4 பெண் காவலர்கள் உள்பட 16 போலீஸார் அந்த வீட்டின் நுழைவாயிலில் காவலில் ஈடுபட்டுள்ளனர். வீட்டுக்கு வெளியே, 2 காவல் துணை ஆய்வாளர்கள் தலைமையில் 15 பேர் கொண்ட போலீஸார் 24 மணிநேரமும் பாதுகாப்பில் உள்ளனர். இரு ஷிப்ட்களில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய போலீஸாரும் இரு ஷிப்டுகள் முறையில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவீட்டைச் சுற்றி 8 கண்காணிப்புகேமிராக்கள், 12 மின் விளக்குகள் பொருத்தப்பட்டும், தீயணைப்பு கருவிகள் போன்றவற்றுடன் பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். என்ன மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறித்தும் அந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here