ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட விடயம்: பிரதி பொலீஸ்மா அதிபரை சந்தித்தது கிளிநொச்சி ஊடக அமையம்!

முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்ட விடயம் தொடர்பில்
நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், ஊடகவியலாளர்களின்
பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படல் வேண்டும் என்றும் வலியுறுத்தி கிளிநொச்சி ஊடக அமையம் இன்று (14) கிளிநொச்சி முல்லைத்தீவு பிராந்திய பிரதி பொலீஸ் மா அதிபரை சந்தித்து காலந்துரையாடியதோடு, கோரிக்கை மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள கிளிநொச்சி முல்லைத்தீவு பிராந்திய
பிரதி பொலீஸ்மா அதிபர் காரியாலயத்தில் இச் சந்திப்பு இன்று காலை ஒன்பது
மணிக்கு இடம்பெற்றது. இதன் போது கிளிநொச்சி ஊடக அமையம் கையளித்த மகஜரில் பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 12-10-2020 அன்று முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக
பிரிவிலுள்ள குமுழமுனை கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் தங்களது ஊடக
பணியில் ஈடுப்பட்டிருந்த முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம்
தவசீலன், கணபதிபிள்ளை குமணன் ஆகிய இரண்டு ஊடகவியலாளர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருந்த குழு ஒன்றினால் கடுமையாக தாக்கப்பட்டு, கொலை அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது.

இது ஊடகச் சுதந்திரத்திற்கும், ஊடகவியலாளர்களின் தடையின்றிய பணிக்கும்
பெரும் சவாலாக அமைந்துள்ளது. எதிர்காலத்தில் ஊடகவியலாளர்கள் அச்சமின்றி
தங்களது பணியை மேற்கொள்ள முடியாத நிலையை இச் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.
எனவே கிளிநொச்சி முல்லைத்தீவு பிராந்திய பிரதி பொலீஸ்மா அதிபர் என்ற
வகையில் தாங்கள் இவ் விடயத்தில் அதிக கரிசனை எடுத்து குற்றவாளிகள்
சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை கிடைக்க வழிசமைப்பதோடு,
ஊடகவியலாளர்களின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்துமாறும் கோருகின்றோம்.
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here