இயக்கத்தில் இருக்கப் போகிறீர்களா?… அவருடன் போகப் போகிறீர்களா?; 14 நாட்களிற்குள் முடிவெடுங்கள்: மணிவண்ணன் ஆதரவாளர்களிற்கு முன்னணி மிரட்டல் கடிதம்!

எமது இயக்கத்தில் இருக்கப் போகிறீர்களா, மணிவண்ணனுடன் போகப் போகிறீர்களா என்பதை 14 நாட்களிற்குள் தீர்மானியுங்கள் என, மணிவண்ணன் சார்பு உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களிற்கு அகில இலங்கை தமிழ் காங்கிரசின் செயலாளர் செ.கஜேந்திரன் எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

யாழிலுள்ள கணிசமான உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் மணிவண்ணன் பக்கம் தாவ ஆரம்பித்துள்ள நிலையில், இந்த போக்கிற்கு மூக்கணாங்கயிறு இடும் முயற்சியாக, மணிவண்ணன் ஆதரவு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களிற்கு முன்னணி இந்த கடிதத்தை அனுப்பியுள்ளது,

யாழ் மாநகரசபை, சாவகச்சேரி நகரசபை, மானிப்பாய் பிரதேசசபை உள்ளிட்ட உள்ளராட்சி மன்றங்களின் சுமார் 10 வரையான மணிவண்ணன் ஆதரவு பிரதிநிதிகளிற்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ் காங்கிரஸ் செயலாளர் செ.கஜேந்திரன் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள அந்த கடிதத்தில்-

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும், அகில இலங்கை  தமிழ் காங்கிரசிற்கும் இடையில் ஏற்படுத்தியுள்ள உடன்பாட்டின் அடிப்படையில் 2018ஆம் ஆண்டு நடந்த உள்ளூராட்சி தேர்தலில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு எமது அரசியல் இயக்கத்தினால் பரிந்துரை செய்யப்பட்டிருந்ததன் அடிப்படையில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு யாழ் மாநகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறீர்கள்.

தாங்கள் எமது அரசியல் இயக்கத்தின் சார்பில் போட்டியிட்டு மாநகரசபை உறுப்பினராக தெரிவாகியுள்ள நிலையில், எமது அமைப்பினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு, நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பபட்ட வகையில், எமது அரசியல் இயக்கத்திற்கும் அதன் தலைமைக்கும் எதிரான கருத்துக்களை பொதுவெளியிலும், முகநூலிலும் தெரிவித்து வருகிறீர்கள்.

எமது அரசியல் இயக்கத்தில் தங்களை இணைத்து பயணிப்பதற்கு நாம் காட்டும் நல்லிணக்கத்தை தொடர்ச்சியாக மீறி வருகிறீர்கள். எமது அரசியல் இயக்கத்தினை மத்தியகுழுவின் தீர்மானங்களே கட்டுப்படுத்தும். எமது அரசியல் இயக்கத்துடன் இணைந்து பயணிப்பதாயின், எமது மத்தியகுழுவின் தீர்மானங்களை யாரும் சவாலுக்குட்படுத்த முடியாது என்பதை தெரிவிக்கிறேன்.

தொடர்ந்தும் தாங்கள் எமது அரசியல் இயக்கத்தை விமர்சிக்கும் போக்கில் செயற்பட உத்தேசித்தால், அதனை எமது அரசியல் இயக்கத்திலிருந்து விலகியே செயற்பட முடியும். எமது அரசியல் இயக்கத்துடன் தாங்கள் இணைந்து பயணிக்க விரும்பினால், அரசியல் இயக்கத்தின் கட்டுப்பாடுகளிற்கு உட்பட்டே செயற்பட முடியும்.

தாங்கள் எமது அரசியல் இயக்கத்துடன் இணைந்து பயணிப்பது அல்லது பயணிக்காது விலகுவது தொடர்பான தங்களின் இறுதி தெரிவை தாங்கள் தீர்மானிப்பதற்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கடிதம் கிடைக்கப் பெற்று 14 நாட்களிற்குள் தங்களின் இறுதி முடிவை எனக்கு எழுத்துமூலம் அறியத்தரவும் என குறிப்பிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here