பெண் மனித வெடிகுண்டை பற்றி மூச்சும் விடக்கூடாது; தமிழ் சட்டத்தரணிக்கு மிரட்டல்: பொலிஸில் முறைப்பாடு!

சஹ்ரான் தீவிரவாத கும்பல் சம்பந்தப்பட்ட வழக்கில் ஆஜராகி வருகின்ற சட்டத்தரணி தெய்வநாயகம் மதிவதனுக்கு தொலைபேசி மூலம் மர்ம நபரால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு இருப்பதாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் சஹ்ரான் தீவிரவாத கும்பல் சம்பந்தப்பட்ட வழக்கு கடந்த திங்கட்கிழமை அழைக்கப்பட்டது. இத்தீவிரவாத கும்பலை சேர்ந்த தற்கொலை குண்டுதாரி என்று நம்பப்படுகின்ற சாரா என்கிற புலஸ்தினி இராஜேந்திரனை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பின்னர் கண்டதாக சொல்கின்ற நபரை நீதிவான் ஐ.என்.ரிஸ்வான் முன்னிலையில் இவர் ஆஜர்ப்படுத்தினார்.

இதை தொடர்ந்து மூடிய அறைக்குள் இந்நபரின் வாக்குமூலங்களை நீதிவான் செவிமடுத்தார். சாரா என்கிற புலஸ்தினி இராஜேந்திரன் பிக் அப் வாகனத்தில் களுவாஞ்சிக்குடி – மாங்காடு பகுதியில் வைத்து ஏறி செல்வதை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் கண்டார் என்று இந்நபர் கூறி உள்ளார்.

இந்நிலையிலேயே வழக்கு இடம்பெற்ற இரவு 9. 30 இற்கும் 10.00 இற்கும் இடைப்பட்ட நேரத்தில் மர்ம நபர் கையடக்க தொலைபேசிக்கு அழைப்பு மேற்கொண்டு இவ்வழக்கு சம்பந்தமாக ஆஜராகவோ, தலையிடவோ வேண்டாம், மீறி ஆஜரானாலோ, தலையிட்டாலோ பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள நேரும் என்று எச்சரித்ததாக சட்டத்தரணி மதிவதனால் கடந்த சனிக்கிழமை முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

சாரா என்கிற புலஸ்தினி இராஜேந்திரன் சாய்ந்தமருது வெலிவேரியன் கிராமத்தில் உள்ள வீட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி மாலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இறந்து போனார் என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. ஆயினும் இறந்தவர்களை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனையில் சாரா என்கிற புலஸ்தினி இராஜேந்திரனின் தாயின் இரத்த மாதிரியுடன் எந்த உடலமும் பொருந்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்பொலிஸ் தரப்பு முடுக்கி விட்ட விசாரணைகளில் சாரா என்கிற புலஸ்தினி இராஜேந்திரன் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பி சென்று உள்ளார் என்று பிற்பாடு கண்டு பிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது. அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக பணியாற்றிய சாமந்த விஜயசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வழங்கிய சாட்சியத்தில் சாரா என்கிற புலஸ்தினி இராஜேந்திரன் மாங்காடு பகுதியில் மறைந்திருப்பதாக நேரில் கண்ட சாட்சி மூலம் இரகசிய தகவல் கிடைத்ததாகவும் நேரில் சென்று பல தகவல்களை பெற்று கொண்டதாகவும் , சாரா என்கிற புலஸ்தினி இராஜேந்திரனை இந்தியாவுக்கு அனுப்பியவர்கள் யார்? என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது என்றும் தெரிவித்து உள்ளார்.

நாம் சட்டத்தரணி மதிவதனை இது தொடர்பாக தொடர்பு கொண்டு கேட்டபோது அவரின் பாதுகாப்பை பொலிஸார் உறுதிப்படுத்த வேண்டும், உரிய விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்ததுடன் சாரா என்ற புலஸ்தினி இராஜேந்திரனை நேரில் கண்ட சாட்சிக்கும் மரண அச்சுறுத்தல்கள் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு இருக்கின்றன என்றும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here