முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் மீது மரக்கடத்தல்காரர்கள் கொலை முயற்சி: ஒளிப்பதிவு சாதனங்களும் திருட்டு!

முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் மரக்கடத்தல்காரர்கள் மேற்கொண்ட தாக்குதலில் இரண்டு ஊடகவியலாளர்கள் காயமடைந்துள்ளனர். ஊடகவியலாளர்களின் ஒளிப்பதிவு சாதனங்களையும் மரக்கடத்தல்காரர்கள் பறித்து சென்றுள்ளனர்.

முறிப்பு பகுதியில் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் மரம் அறுக்கும் இடத்திற்கு அருகில், மரக்கடத்தல்காரர்கள் மரங்களை அறுத்து சேமித்து வைக்கும் இடமொன்று தொடர்பான தகவல் கிடைத்ததையடுத்து முல்லைத்தீவை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்கள் அங்கு செய்தி சேகரிக்க சென்றனர்.

சண்முகம் தவசீலன், குமணன் ஆகியோர்மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, பிரதேசத்தை சேர்ந்த பிரபல மரக்கடத்தல்காரன் ஒருவர், மரத்தினாலேயே சொகுசு வீடொன்றை அமைத்திருந்ததை அவதானித்து அந்த வீட்டை படம் பிடித்த போது, வீட்டுக்குள் மறைந்திருந்த மரக்கடத்தல்காரர்கள் திடீரென அவர்களை சூழ்ந்த தாக்கினர்.

அத்துடன், வாளினால் வெட்டப் போவதாக மிரட்டி ஊடகவிலாளர்களிடமிருந்து கமராக்களை பறிமுதல் செய்து, அதிலிருந்த மெமரி கார்ட்களை பறித்தெடுத்தனர்.

இரண்டு ஊடகவிலாளர்களும் முகத்தில் காயமடைந்தனர். சண்முகம் தவசீலனின் பற்கள் இரண்டு உடைந்தன.

ஊடகவியலாளர்கள் தற்போது முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்து கொண்டிருக்கின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here