தோனியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த 16 வயதுச் சிறுவன் சிக்கினார்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கப்டன் மகேந்திர சிங் தோனியின் மகளுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் மிரட்டல் விடுத்த 16 வயதுச் சிறுவன் குஜராத் மாநிலம், முந்த்ரா நகரில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

விரைவில் அந்தச் சிறுவன் ராஞ்சி நகர போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவார் என்று முந்த்ரா நகர போலீஸார் தெரிவித்தனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் டி20 தொடர் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் சிஎஸ்கே அணி தொடக்கத்திலிருந்தே மோசமான தோல்விகளை அடைந்து வருவது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் மனவேதனையை அளித்துள்ளது. ஆனால், விளையாட்டுப் போட்டியை விளையாட்டாகப் பார்க்காத சில ரசிகர்கள் சில நேரங்களில் எல்லை மீறி நடந்து கொள்வதும் வழக்கமாகிறது.

கடந்த 7-ம் தேதி நடந்த ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஒரு ரசிகர் தோனியின் மனைவி சாக்ஷி தோனியின் இன்ஸ்டாகிராம் பதிவில் அவரின் 5 வயது மகளுக்கு மிரட்டல் விடுத்திருந்தார். தோனி ஐபிஎல் போட்டிகளில் ஒழுங்காக விளையாடாவிட்டால், தோனியின் மகளைப் பாலியல் பலாத்காரம் செய்துவிடுவேன் என்று எல்லை மீறி, ஏற்க முடியாத வகையில் மிரட்டல் விடுத்திருந்தார்.

இதுகுறித்து தோனியின் மனைவி சாக்ஷி தோனி சார்பில் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்டாகிராம் பதிவு எந்த சர்வர், எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பதை ராஞ்சி சைபர் பிரிவு போலீஸார் ஆய்வு செய்தபோது குஜராத் மாநிலம், முந்த்ரா நகரிலிருந்து வந்துள்ளதைக் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, செல்போன் எண், ஐபிஎண் உள்ளிட்ட விவரங்களை குஜராத் போலீஸாருக்கு அனுப்பிய ராஞ்சி போலீஸார் மிரட்டல் விடுத்த அந்த நபரைப் பிடிக்க உதவக் கோரினர்.

ராஞ்சி போலீஸார் கேட்டுக்கொண்டதையடுத்து, அந்த செல்போன் எண்ணுக்குரிய முகவரியைக் கண்டுபிடித்தபோது, அந்த நபர் 16 வயதுச் சிறுவன் என போலீஸாருக்குத் தெரியவந்தது. அந்தச் சிறுவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து கட்ச் மேற்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சவுரவ் சிங் நிருபர்களிடம் கூறுகையில், “தோனியின் மனைவிக்கு இன்ஸ்டாகிராமில் மிரட்டல் விடுத்தவர் முந்த்ரா நகர் அருகே உள்ள நாம்னா கபாயா கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர். இந்த 16 வயதுச் சிறுவன்தான் தோனியின் மகளுக்கு அதிர்ச்சிக்குரிய மிரட்டலை விடுத்துள்ளார்.

ராஞ்சி போலீஸார் அளித்த விவரங்கள் அடிப்படையில் முந்த்ரா போலீஸார் அந்த முகவரியில் உள்ள நபரைக் கண்டுபிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இன்ஸ்டாகிராமில் தோனியின் மனைவிக்கு மிரட்டல் விடுத்ததை அந்தச் சிறுவன் ஒப்புக்கொண்டார்.

கொல்கத்தா அணியிடம் சிஎஸ்கே அணி தோற்றதால் எழுந்த ஆத்திரத்தில் அவ்வாறு செய்ததாக அந்தச் சிறுவன் தெரிவித்தார். இதையடுத்து அந்தச் சிறுவன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விரைவில் ராஞ்சி போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவார். ராஞ்சி போலீஸார் இன்று வருவதாகக் கூறியுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here