மாகாணசபை தேர்தலில் மாவைக்கு செக் வைக்கும் சுமந்திரன்: முதலமைச்சர் கனவுடன் களமிறக்கப்படும் சிவஞானசோதி!

மாவை சேனாதிராசா- சிவஞானசோதி

எதிர்வரும் வடமாகாணசபை தேர்தலுடன் தமிழ் அரசியலில் தனக்கு சாதகமான ஒரு நிலைமையை ஏற்படுத்தும் திரைமறைவு முயற்சிகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பேச்சாளரும், யாழ் மாவட்ட எம்.பியுமான எம்.ஏ.சுமந்திரன் தீவிரமாக இறங்கியுள்ளார்.

மாகாணசபை தேர்தலில் களமிறக்கும் வேட்பாளர்களின் மூலம்- தீவிர தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இருந்தபடி தனக்கு குடைச்சல் தந்த கொண்டிருக்கும் மாவை சேனாதிராசாவை அரங்கை விட்டு அகற்றுவது, மாகாணசபையை பிடிக்குள் கொண்டு வந்து, தமிழ் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது எம்.ஏ.சுமந்திரனின் நோக்கமென கருதப்படுகிறது.

மாவை சேனாதிராசாவை அரங்கை விட்டு அகற்ற, கடந்த அரசில் ரணில் விக்கிரமசிங்கவின் கீழிருந்த அமைச்சின் செயலாளராக பணியாற்றிய சிவஞானசோதியை வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கும் தீவிர முயற்சிகளில் எம்.ஏ.சுமந்திரன் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது.

எம்.ஏ.சுமந்திரன் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் இது குறித்து தமிழ்பக்கம் வினவியபோது, அந்த தகவலை அவர் ஏற்றுக்கொண்டார்.

கடந்த ரணில் அரசில் செல்வாக்கு மிக்கவராக இருந்த சுமந்திரனும், ரணிலின் நம்பிக்கைகுரியவராக இருந்த சிவஞானசோதியும், ரணில் ஆட்சிக்காலத்திலேயே இதற்கான இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்தியிருந்தனர். எனினும், அது பேசப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், மாவை சேனாதிராசா நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்து, மாகாணசபை தெர்தலை குறிவைத்துள்ள நிலையில், மீண்டும் சிவஞான சோதியுடன் பேசி, அதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், சிவஞான சோதிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் அண்மைக்காலமாக கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த அரசில் ஏனைய எம்.பிக்களின் கொடுக்கப்படும் அபிவிருத்தி முன்மொழிவுகளிற்கான பணத்தையும் வெட்டி, எம்.ஏ.சுமந்திரனிற்கு வழங்கினார் என்ற அதிருப்தி ஏனைய எம்.பிக்களிடமுள்ளது. நேரில் அது பற்றி சிலர் அவரிடம் சுட்டியும் காட்டியுமுள்ளனர். எனினும், அவர் அதை கணக்கிலெடுக்கவில்லை. இது பற்றி தமிழ் பக்கத்தில் அப்பொழுதே குறிப்பிட்டிருந்தோம்.

அப்பொழுது ஒரு தலைப்பட்சமாக அவர் நடந்து கொண்டபோதே, அவருடைய “எதிர்கால கனவு“ பற்றி அரசல்புரசலாக பேசப்பட்டது. இப்பொழுது அது உறுதியாகிறது.

எம்.ஏ.சுமந்திரன் தரப்பு திட்டத்தின்படி- சிவஞானசோதி, மாவை சேனாதிராசா உள்ளிட்ட வேட்பாளர்கள் வடமாகாணசபை தேர்தலில் போட்டியிட்டாலும் ஆரம்பத்திலேயே முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை சொல்லாமல் விடுவது என்பது. முதலே சொன்னால் மக்கள் எப்படியான எதிர்வினையை ஆற்றுவார்கள் என்பது தெரியாது என்ற காரணத்தை கூறி, மாவைக்கு செக் வைக்கலாமென்பது திட்டம்.

தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன்- சி.சிறிதரன்-சாள்ஸ் நிர்மலநாதன் தரப்பில் களமிறக்கப்படுபவர்களிற்கு கூட்டாக பணியற்றி வெற்றியடைய வைப்பது, சிவஞானசோதிக்கு மூவரும் தீவிர பிரச்சாரம் செய்வது என்பது திட்டம்.

இதன்மூலம் எதிர்வரும் வடமாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைக்கும் ஆசனங்களில் அரைவாசிக்கும் அதிக ஆசனங்களை இந்த கூட்டணி கைப்பற்றுமென அவர்கள் கருதுகிறார்கள்.

தேர்தலின் பின்- முதலமைச்சர் அறிவிப்பின்போது- வெற்றிபெற்றவர்களிடையே நடக்கும் வாக்கெடுப்பிலேயே முதலமைச்சர் தெரிவு என மாவைக்கு செக் வைக்கலாமென்பது இப்போதைய திட்டம்.

ரணில் தரப்பை சேர்ந்த ஒருவரை வடக்கு முதலமைச்சராக்குவதென்ற எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதனின் திட்டம் பற்றி அண்மைய நாட்களில் மாவை சேனாதிராசாவும் அறிந்து வைக்கிறார் என்பதுதான் கூடுதல் சுவாரஸ்யம்.

இப்பொழுது வேட்பாளர் நியமனம் வழங்கும் சமயத்தில்தான் கூடுதல் சுவாரஸ்யம் உள்ளது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here