க.பொ.த உயர்தர பரீட்சை நாளை: மாணவர்கள், பெற்றோருக்கான இறுதி வழிகாட்டல் குறிப்புக்கள்!

நாளை (12) கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சை ஆரம்பிக்கிறது.

இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளது. இந்த ஆண்டு 362,824 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். நாடு முழுவதும் 2,648 பரீட்சை மையங்கள் செயற்படம்.

பரீட்சையின் காலை அமர்வு காலை 8.30 மணிக்கு ஆரம்பிக்கும். பிற்பகல் அமர்வு மதியம் 1 மணிக்கு தொடங்கும்.

சிறப்பு சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயற்படுத்தப்படவுள்ளதால், விண்ணப்பதாரர்கள் பரீட்சை தொடங்க திட்டமிட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே பரீட்சை மையத்திற்கு செல்ல வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சை கால அட்டவணையில் சிறப்பு கவனம் செலுத்தவும், பரீட்சை மையங்களுக்கு வரும்போது சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றவும் விண்ணப்பதாரர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

பரீட்சைக் கடமையில் உள்ள ஊழியர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். பாடசாலை வளாகத்திற்கு வரும்போது மற்றும் வெளியேறும்போது மாணவர்கள் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை, பரீட்சை மண்டபத்தில் மாணவர்கள் முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயமில்லை.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் அடையாளம் காணப்பட்டால், அவர் தனி அறையில் பரீட்சை எழுத அனுமதிக்கப்படுவார்.

இதேவேளை, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடத்தப்படும் க.பொ.த உயர் தர பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் நூறு சதவீதம் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பரீட்சை நடைபெறும் மண்டப வளாகத்திற்கு வந்த பின்னர் குழுக்களாக கூடி பாட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவது உள்ளிட்ட விடயங்களில் ஈடுபட வேண்டாம் என அவர் மாணவர்களை கேட்டுள்ளார்.

இன்றைய தினம் (11) முடிவடைந்த 5 ஆம் ஆண்டு புலமைப்பரீசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் முறையான சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாமை தொடர்பில் தெரியவந்துள்ளதாகவும் ஆகவே இந்த விடயத்தில் பெற்றோர் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பரீட்சை முடிவடைந்தவுடன் வீடுகளுக்கு செல்ல வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

ஊடரங்கு அனுமதி பத்திரங்களை பரீட்சை அனுமதி பத்திரங்களாக பாவிக்க முடியும் எனவும் தேவையேற்படின் காண்பிக்க அதன் நகலை கைவசம் வைத்திருக்குமாறும் அவர் மாணவர்களை கேட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here