ஒப்பந்தம் முடிகிறது; வாஸ்து பொருத்தமான வாசஸ்தலத்தை கைவிட மனமில்லாத வடக்கு முதலமைச்சர்!

வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து ஒக்ரோபர் மாதத்துடன் காலி செய்யுமாறு, அதன் உரிமையாளராக தமிழரசுக்கட்சியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் இ.ஜெயசேகரம் கடிதம் மூலம் அறிவித்துள்ளார் என்பதை தமிழ்பக்கம் அறிந்துள்ளது.

யாழ்ப்பாணம் கோவில் வீதியில் வடக்கு முதலமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் அமைந்துள்ளது. அந்த வீடு, யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் தலைவரும், வடமாகாணசபை உறுப்பினருமான இ.ஜெயசேகரத்திற்கு சொந்தமானது.

2013இல் வடமாகாணசபை தேர்தல் முடிந்த சமயத்தில், இந்த வீட்டை விக்னேஸ்வரனின் வாசஸ்தலமாக்குவதில் மாவை சேனாதிராசா முக்கிய பங்காற்றினார். அப்போது வணிகர் கழக தலைவராக இருந்த இ.ஜெயசேகரத்தின் வீட்டிற்கு நேரில் சென்று, முதலமைச்சரிற்கு நல்லதொரு வாசஸ்தலத்தை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டிருந்தார். ஜெயசேகரம் வசித்த வீட்டிற்கு அடுத்தடுத்ததாக இன்னொரு வீட்டை வர்த்தக தேவைகளிற்காக பாவித்து வந்தார். அந்த வீட்டை வழங்கலாமா என மாவையிடம் கேட்க, அவரும் சம்மதித்தார்.

தொண்டு நிறுவனமொன்று மாதம் 80,000 ரூபா வாடகைக்கு அந்த வீட்டை பயன்படுத்தி வந்தது. அவர்களின் ஒப்பந்தம் அந்த சமயத்தில் முடிய, அந்த வீடு முதலமைச்சரின் தனிப்பட்ட வாசஸ்தலமாக மாறியது.

முதலமைச்சரின் வாசஸ்தலத்திற்காக அரசாங்கம் வழங்கிய 50,000 ரூபா பணத்தையே வாடகையாக தர முடியுமென முதலமைச்சர் தரப்பால் சொல்லப்பட்டிருந்தது.

இந்தநிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து முதலமைச்சர் வெளியேறி தனி அணிக்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார். இந்த நிலையில், தற்போதுள்ள வீட்டில் தொடர்ந்தும் அவரால் தங்கியிருக்க முடியாது, ஜெயசேகரம் தமிழரசுக்கட்சி உறுப்பினராக உள்ளதால் அதற்கான வாய்ப்பில்லையென்று சிந்தித்த தமிழ் மக்கள் பேரவையினர் முதலமைச்சரிற்கு வேறு வாசஸ்தலம் ஏற்பாடு செய்துள்ளனர். யாழ்ப்பாணம் கோப்பாய், உரும்பிராய் பகுதிகளில் இரண்டு வீடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் அதில் பொருத்தமானதை தேர்வுசெய்யும்படி பேரவையினர் கூறியிருந்தனர்.

எனினும், வாஸ்து மற்றும் ஆன்மீக நம்பிக்கைகள் அதிகமாக கொண்ட முதலமைச்சர் தற்போதைய வீடுதான் தனக்கு பொருத்தமானது என பேரவையினரிடம் கூறியுள்ளார்.

ஜெயசேகரத்துடன் இதை பேசிப்பார்ப்பதாக கூறி, தனது தனிப்பட்ட அலுவலர் ஒருவர் மூலம் கடிதமொன்றை கொடுத்துள்ளார். அதில், மேலும் ஒரு வருடத்திற்கு பொருத்தமான வாடகையுடன் வீட்டு ஒப்பந்தத்தை நீடிக்கலாமா என கோரப்பட்டிருந்தது.

இந்த விடயத்தை உடனடியாக மாவை சேனாதிராசாவிடம், ஜெயசேகரம் தெரிவித்தார். மேலும் சில மாகாணசபை உறுப்பினர்களிடமும் ஆலோசித்திருக்கிறார். ஒப்பந்தத்தை தொடர்வதில் எமக்கு உடன்பாடு கிடையாது என்பதை சிலர் நாகரிகமான தொனியில் தெரிவிப்ப, இனி இந்த விடயத்தில் நான் தலையிட மாட்டேன் என மாவை ஒதுங்கிக் கொண்டார்.

கட்சியின் நிலைப்பாட்டை நாடி பிடித்து பார்த்ததும், “வரும் ஒக்ரோபரின் பின் ஒப்பந்தத்தை நீடிக்க முடியாத நிலைமையில் இருக்கிறேன். வீட்டில் சில புனரமைப்பு பணிகளை அவசரமாக செய்ய வேண்டியுள்ளது“ என்ற சாரப்பட மாகாணசபை உறுப்பினர் இ.ஜெயசேகரம் கடிதம் அனுப்பியுள்ளார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலின் முன்னர் மாகாணசபை தேர்தலிற்கான வாய்ப்புக்கள் மிக அரிதாக உள்ள நிலைமையில், அதுவரை கோப்பாய் அல்லது உரும்பிராய் வீட்டை முதலமைச்சர் வாசஸ்தலமாக கொண்டிருப்பார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here