ஐ.பி.எல் தோல்வியின் எதிரொலி: தோனியின் 5 வயது மகளை கடத்தி வல்லுறவிற்குள்ளாக்கப் போவதாக சமூக ஊடகத்தில் மிரட்டல்!

ஐ.பி.எல் தொடரில் ஆடிவரும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் கப்டன் மகேந்திர சிங் தோனியின் 5 வயதான மகளை பாலியல் பலாத்காரம் செய்யப் போவதாக சமூக ஊடகங்களில் விடுக்கப்பட்ட மிரட்டலை தொடர்ந்து ராஞ்சியில் உள்ள மகேந்திர சிங் தோனியின் பண்ணை வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பண்ணை வீட்டில் பொலிசார் நிறுத்தப்பட்டுள்ளதுடன், சந்தேகத்திற்கிடமானவர்களின் நடமாட்டத்தை அவதானிக்க சிவில் உடையில் பொலிசார் அந்த பகுதியில் ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.

ஐ.பி.எல் தொடரில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து தோனியின் சிறிய மகளை பாலியல் பலாத்காரம் செய்யப் போவதாக சமூக ஊடககளில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐ.பி.எல் தொடரில் தோனி விளையாடும்போது மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஷிவா ஆகியோர் ராஞ்சியிலுள்ள பண்ணை வீட்டில் தங்கியுள்ளனர்.

பண்ணை வீட்டிலும் சுற்றுப்புறங்களிலும் பாதுகாப்பை அதிகரித்ததுடன், சமூக ஊடகங்களில் மோசமான கருத்துக்களை இடுகையிட்ட நபரைக் கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

“தோனியின் பண்ணை வீடு அருகே ரோந்து நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. வீட்டின் அருகே சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அதோடு, எந்தவொரு அவசரத்தையும் சமாளிக்க ஒரு அணி பண்ணை இல்லத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது, ”என்று அந்த பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி நௌசாத் ஆலம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here