சுனில் நரேன் பந்துவீச்சில் மீண்டும் சந்தேகம்; நடுவர்கள் புகார்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரேன் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக நடுவர்கள் புகார் அளித்துள்ளனர்.

இருப்பினும் அவர் பந்தவீசத் தடையில்லை. 2வது முறையாக நடுவர்கள் புகார் அளித்தால் நரேனுக்குத் தடை விதிக்கப்படும்.

அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் லீக்கின் பரபரப்பான ஆட்டத்தில், பஞ்சாப் அணியை 2 ரன்களில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது கொல்கத்தா அணி. முதலில் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது.

165 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்து 2 ரன்களில் பரிதாபமாகத் தோல்வி அடைந்தது.

பிரஷித் கிருஷ்ணா, சுனில் நரேன் வீசிய கடைசி இரு ஓவர்கள்தான் ஆட்டத்தையே மாற்றின. கடைசி ஓவரில் கடைசிப் பந்தில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவை. சிக்ஸர் அடித்தால் ஆட்டம் டையில் முடிந்து சூப்பர் ஓவருக்குச் சென்றுவிடும்.

நரேன் வீசிய அந்த பந்தில் மக்ஸ்வெல் தூக்கி அடித்தார். பவுண்டரி எல்லைக்கு 2 இன்ச் முன்பாக பந்து பிட்ச் ஆனதால் பவுண்டரியோடு பஞ்சாப்பின் போராட்டம் தோல்வியில் முடிந்தது. 2 இன்ச் தள்ளி பந்து பிட்ச் ஆகி இருந்தால் சிக்ஸர் சென்றிருக்கும்.

ஆட்டமும் சூப்பர் ஓவர் சென்றிருக்கும். 2 இன்ச்சில் பஞ்சாப் தோல்வி அடைந்தது. சுனில் நரேனின் பந்துவீச்சு அனைவராலும் பாராட்டப்பட்டது. இக்கட்டான நேரத்தில் சிறப்பாகப் பந்துவீசி கொல்கத்தா அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.

இந்நிலையில்,பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சுனில் நரேன் பந்துவீசிய விதம் ஐசிசி விதிமுறைகளுக்கு மாறாக இருப்பதாகக் கூறி களநடுவர் உலஹாஸ் காந்தி, கிறிஸ் கஃபானே இருவரும் ஐபிஎல் அமைப்பிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்தப் புகாரால் தற்போது சுனில் நரேன் எச்சரிக்கைப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அடுத்துவரும் போட்டிகளில் சுனில் நரேன் பந்துவீசத் தடையில்லை. ஒருவேளை மீண்டும் நடுவர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் ஐபிஎல் தொடர் முழுவதும் சுனில் நரேன் பந்துவீசத் தடை விதிக்கப்படுவார். பிசிசிஐ அமைப்பின் பந்துவீச்சு சந்தேக ஆராய்வுக் குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்புதான் மீண்டும் நரேன் பந்துவீச அனுமதிக்கப்படுவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here