இதயத்துடிப்பு எகிறிவிட்டது; கடைசி ஓவரை என்னை வீச வைக்காதீர்கள்: சுனில் நரேன் வேண்டுகோள்

கடைசி ஓவரை என்னை வீச வைப்பது சரியானது அல்ல. வேறு யாரையாவது வீசவைக்கலாம். என் இதயத்துடிப்பு எகிறிவிட்டது. அமைதியாக இருந்தேன் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சாளர் சுனில் நரேன் தெரிவித்தார்.

அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் லீக்கி்ன் பரபரப்பான ஆட்டத்தி்ல், பஞ்சாப் அணியை 2 ரன்களில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது கொல்கத்தா அணி. முதலில் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது.

165 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்து 2 ரன்களில் பரிதாபமாகத் தோல்வி அடைந்தது.

பிரஷித் கிருஷ்ணா, சுனில் நரேன் வீசிய கடைசி இரு ஓவர்கள்தான் ஆட்டத்தையே மாற்றின. கடைசி ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. மக்ஸ்வெல், மன்தீப் சிங் களத்தில் இருந்தனர். அனுபவம் மிகுந்த சுனில் நரேன் பந்துவீசினார்

முதல் பந்தில் இரு ரன்கள், அடுத்த பந்தில் ரன் இல்லை, 3வது பந்தில் பவுண்டரி, 4வது பந்தில் லெக்பை, 5வது பந்தில் மன்தீப் ஆட்டமிழந்தார். கடைசிப் பந்தில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவை. சிக்ஸர் அடித்தால் ஆட்டம் டையில் முடிந்து சூப்பர் ஓவருக்குச் சென்றுவிடும்.

நரேன் வீசிய அந்த பந்தில் மக்ஸ்வெல் தூக்கி அடித்தார். பவுண்டரி எல்லைக்கு 2 இன்ச் முன்பாக பந்து பிட்ச் ஆனதால் பவுண்டரியோடு பஞ்சாப்பின் போராட்டம் தோல்வியில் முடிந்தது. 2 இன்ச் தள்ளி பந்து பிட்ச் ஆகி இருந்தால் சிக்ஸர் சென்றிருக்கும். ஆட்டமும் சூப்பர் ஓவர் சென்றிருக்கும். 2 இன்ச்சில் பஞ்சாப் தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி எதிர்பாராத வெற்றி பெற்றபின் அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளரும், வெற்றிக்கு முக்கியக் காரணமாக சுனில் நரேன் பேட்டி அளித்தபோது கூறுகையில், “கடைசிப் பந்தை மக்ஸ்வெல் தூக்கி அடித்துபோது பந்து மேலே சென்றபோது, என் நினைப்பு முழுவதும் நான் சரியாகத்தானே வீசினேன், ஓப்சைடில் ஃபுல்வைட் பந்தாகத்தானே வீசினேன். தவறு செய்துவிட்டேனா என்று நினைத்தேன். நல்ல வேளை சிக்ஸர் போகவில்லை.

என்னை கடைசி ஓவர் பந்துவீசச் செய்வது சரியான முடிவல்ல. ஆனால், வேறு சிலர் இதைச் சிறப்பாகச் செய்வார்கள். நான் இதற்கு முன் கடைசி ஓவரை வீசியிருக்கிறேன். ஆனால், இந்த முறை எனது இதயத்துடிப்பு எகிறியது. ஆனால், அமைதியாக இருந்தேன்” எனத் தெரிவித்தார்.

கொல்கத்தா அணியின் கப்டன் தினேஷ் கார்த்திக் கூறுகையில், “கடைசி நேரத்தில் எங்களுக்கு நரேன் பல நேரங்களில் கைகொடுத்துள்ளார். எப்போதுமே அணிக்கு எவ்வாறு சிறந்த பங்களிப்பை அளிப்பது எனப் பார்ப்பார். அதைச் செய்திருக்கிறார். சுனில் மட்டுமல்ல, மோர்கன், மெக்குலத்துக்கும் இந்த வெற்றியில் பங்கு உண்டு. உலகின் சிறந்த கப்டனை எனது அணியில் வைத்திருக்கும் நான் அதிர்ஷ்டக்காரன்.

ராகுல், அகர்வால் களத்தில் இருந்தவரை ஏதாவது வித்தியாசமாக செய்தால்தான் போட்டியை எடுத்துச் செல்ல முடியும் என நினைத்தேன். வருண், சன்னி, பிரஷித் மூவரும் சிறப்பாகப் பந்துவீசினார்கள். அதிலும் 19வது ஓவரை பிரஷித் சிறப்பாக வீசினார்” எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here